ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரிதேங்காய் உடைத்து விவசாயிகள் நூதன போராட்டம்
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி சிவகிரியில் தேங்காய் உடைத்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகிரி
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க கோரி சிவகிரியில் தேங்காய் உடைத்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேங்காய் உடைக்கும் போராட்டம்
தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் கட்சி சார்பற்ற விவசாய சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் சிவகிரியில் உள்ள தியாகி தீரன் சின்னமலை சிலை அருகே உள்ள சாலையில் தேங்காய் உடைக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது.
கோஷங்கள்
போராட்டத்துக்கு கட்சி சார்பற்ற விவசாய சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கே.பி.சண்முகசுந்தரம், அவைத்தலைவர் பாலசுப்ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு கிழக்கு மாவட்ட தலைவர் சதாசிவம் கலந்து கொண்டு தேங்காயை முதன்முதலாக உடைத்து போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து விவசாயிகள் கோாிக்கைகளை வலியுறுத்தி தேங்காயை ரோட்டில் உடைத்து கோஷங்கள் எழுப்பினர். இதில் காங்கேயம் ஒன்றிய தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கரூர் மாவட்ட தலைவர் பாலு குட்டி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் காயார் செந்தில், ஏர்முனை இளைஞரணி மாவட்ட தலைவர் யுவராஜ உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.