சோலார் ஜெனரேட்டர் நெட் மீட்டர் இணைப்பு வழங்க தாமதம்; பாதிக்கப்பட்டவருக்கு ரூ.2¼ லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

சோலார் ஜெனரேட்டர் நெட் மீட்டர் இணைப்பு வழங்க தாமதம் செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.2.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-07-19 18:24 GMT

சோலார் ஜெனரேட்டர்

கரூர் மாவட்டம் க.பரமத்தியை சேர்ந்த குப்புசாமி மகன் பாலு. கடந்த 2017-ம் ஆண்டு தனது வீட்டில் சூரிய மின் உற்பத்தி ஜெனரேட்டர் அமைத்து அதன் மூலம் தன் மின் உற்பத்தி செய்து வீட்டுக்கு தேவையான மின்சாரத்தை பயன்படுத்திக்கொண்டு மீதமுள்ளதை மின்வாரியத்திற்கு விற்பனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த திட்டத்தின் கீழ் 2017-ம் ஆண்டு பாலு அவரது வீட்டில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் செலவில் சூரிய மின் உற்பத்தி ஜெனரேட்டர் (ரூப் டாப் சோலார் ஜெனரேட்டர்) அமைத்து, அதிலிருந்து பெற்ற மின் உற்பத்தியை வீட்டுக்கு பயன்படுத்திக்கொண்டு மீதம் உள்ளதை மின்வாரியத்திற்கு அளித்து வந்தார். அவர் வீட்டில் செய்யப்படும் மின் உற்பத்தி, அவர் பயன்படுத்தும் மின் அளவு, அவர் மின்வாரியத்திற்கு வழங்கும் மின் அளவு ஆகியவற்றை கணக்கீடு செய்யும் நெட் மீட்டர் இணைப்புக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி ரூ.6 ஆயிரத்து 25 செலுத்தி மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் காத்திருந்தார்.

இழப்பீடு

ஆனால், பாலுவுக்கு பிறகு இணைப்புக்கு பணம் செலுத்தியவர்களுக்கு இணைப்பு வழங்கப்பட்ட நிலையில் 8 மாதங்களுக்கு மேலாகியும் பாலுவுக்கு நெட் மீட்டர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதையடுத்து கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பாலு கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் 9-ந் தேதி வழக்கு தாக்கல் செய்தார். அதில், சம்பந்தப்பட்ட 3 மின்வாரிய அதிகாரிகள் இழப்பீடாக ரூ.5 லட்சம், மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.10 ஆயிரம், மின் வாரியத்திற்கு கட்டணமாக செலுத்திய ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த கரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பாலகிருஷ்ணன், உறுப்பினர் (பொறுப்பு) ஏ.எஸ்.ரத்தினசாமி ஆகியோர் மின் வாரியத்தின் சேவைக்குறைப்பாட்டினால் பாலுவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், மின் வாரியத்திற்கு கூடுதலாக செலுத்திய மின் கட்டணம் ரூ.10 ஆயிரம், இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கவும் இவற்றை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழக்கு தாக்கல் செய்த தேதியில் இருந்து உத்தரவு வந்த நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் வழங்கவும் நேற்று உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்