சுவர் விளம்பரத்தில் பெயர் அழிப்பு: மர்மநபர்களை கைது செய்யக்கோரி அ.தி.மு.க.வினர் மறியல்
சுவர் விளம்பரத்தில் பெயர் அழிக்கப்பட்டதால் மர்மநபர்களை கைது செய்யக்கோரி அ.தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.;
செம்பட்டு:
அ.தி.மு.க.வில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளராக சீனிவாசன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவருக்கு கட்சியின் பல்வேறு நிர்வாகிகளும், தொண்டர்களும் திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் சுவரொட்டி ஒட்டியும், விளம்பர பதாகைகள் வைத்தும் என அ.தி.மு.க.வினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதன்படி, திருச்சி மாநகர் விமானநிலைய பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி தலைமையில் திருச்சி விமான நிலையத்தின் எதிரில் உள்ள அரசு சுகாதாரத்துறை பணிமனை வளாக சுவரில் வாழ்த்து தெரிவித்து, அ.தி.மு.க.வினரால் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை அந்த விளம்பரத்தில் பகுதி செயலாளர் பெயர் மட்டும் தார் பூசி அழிக்கப்பட்டு இருந்தது. இதைப்பார்த்த 65-வது வட்ட அ.தி.மு.க. செயலாளர் விநாயகமூர்த்தி தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் விமான நிலைய போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது, போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீஸ் நிலையம் முன் புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.வின் இந்த திடீர் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்தும் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, சுவா் விளம்பரத்தில் பெயரை அளித்த மர்மநபர்களை கைது செய்யக்கோரி அவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து சென்றனர்.