மின்வாரிய நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு
மின்வாரிய நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
குளித்தலை கோட்டத்திற்கு உட்பட்ட அய்யர்மலை துணை மின் நிலையத்தில் நாகேஷ்வரன் என்பவர் சிறப்பு நிலையாக்க முகவராக பணியாற்றி வந்துள்ளார். இவரை எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந்தேதி மின்சார வாரிய அதிகாரிகளால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு பல மாதங்கள் ஆனநிலையிலும் இதுநாள் வரை அவரிடம் எந்தவிதமான விசாரணை செய்யாமலும், அவருக்கு பிழைப்பூதியம் மற்றும் மறு நியமன பணி ஆணை வழங்காமலும் கரூர் மின் வட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.இதை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 10-ந்தேதி இறும்பூதிபட்டி பகுதியில் உள்ள அய்யர்மலை துணை மின் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விளம்பர பதாகை அய்யர்மலை துணை மின் நிலையம் முன்பு கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.