செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை 6 ஆயிரம் கன அடியாக உயர்த்த முடிவு..!

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

Update: 2023-12-04 06:39 GMT

சென்னை,

'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அத்துடன் முக்கிய சாலைகளிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது.

பல இடங்களில் பெய்துவரும் மழைநீர், அடையாற்றில் கலப்பதால் அடையாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த சூழலில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை 6 ஆயிரம் கன அடியாக உயர்த்த முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, ஏரிக்கு வரும் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், 3 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மழையால் நேமம் ஏரி, பிள்ளைப்பாகம் ஏரி நிரம்பியதால், தற்போது செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, உபரி நீர் வெளியேற்றம் 3 ஆயிரம் கன அடியில் இருந்து 6 ஆயிரம் கன அடியாக அதிகரிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி, தற்போது 21.77 அடியாக உள்ளது.

 

 

Tags:    

மேலும் செய்திகள்