உணவூட்ட மானியம் வழங்காததால் சத்துணவு திட்ட பணியாளர்கள் அவதி-ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

உணவூட்ட மானியம் வழங்காததால் சத்துணவு திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

Update: 2023-03-25 18:45 GMT


ராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சகாய தமிழ்செல்வி, மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் பலர் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 யூனியன்களிலும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்துக்கு கடந்த ஜூலை முதல் இதுவரை 9 மாதங்களுக்குரிய உணவூட்ட மானியம் வழங்கவில்லை. இத்திட்டத்தில் பணிபுரியும் ஒவ்வொரு அமைப்பாளரும் 3 முதல் 5 மையங்கள் வரை கூடுதல் பொறுப்பாக பணியாற்றி வருகின்றனர். மிக குறைந்த மாத ஊதியத்தில் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்கள் ஒவ்வொருவரும் ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று உணவூட்ட செலவினங்களை மேற்கொண்டு வருகிறோம். அருகில் உள்ள மாவட்டங்களில் எல்லாம் உணவூட்ட மானியம் நிலுவையின்றி வழங்கப்பட்டுள்ளது. சத்துணவு தி்ட்டத்தில் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவை பெண்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். தங்களது சம்பளத்தில் மையங்களுக்கு செலவு செய்து விட்டு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதே நிலை நீடித்தால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சத்துணவு மையங்களை மூடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உணவூட்ட மானியம் கிடைக்கச்செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்