10 டன் வெண்ணெய் கொள்முதல் செய்ய முடிவு
ஆவின் நெய் தட்டுப்பாட்டை போக்க 10 டன் வெண்ணெய் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர் சத்துவாச்சாரியில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு பால் பாக்கெட்டுகள் முகவர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஆவின் சார்பில் நெய் உள்ளிட்ட பால்சார்ந்த பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது. இதில் நெய் தட்டுப்பாடு நிலவி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
தற்போது கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகை காலம் என்பதால் ஆவின் நெய் தேவை அதிகமாக உள்ளது. தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதன்படி வேலூர் ஆவின் நிர்வாகம் சார்பில் நெய் உற்பத்தி செய்ய 10 டன் வெண்ணெய் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய தேவையை முன்னிட்டு ஈரோடு, சேலத்தில் இருந்து ஆவின் நெய் கொள்முதல் செய்யப்பட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெண்ணெய் கிடைக்கப்பெற்ற பின் ஓரிரு நாட்களில் நெய் தட்டுப்பாடு இருக்காது என ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.