மாரடைப்பால் மரணம்:நடிகர் மாரிமுத்து உடல் சொந்த ஊரில் தகனம்

மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த ஊரான வருசநாடு அருகே உள்ள பசுமலைத்தேரியில் தகனம் செய்யப்பட்டது.

Update: 2023-09-09 18:45 GMT


மாரடைப்பால் சாவு

திரைப்பட இயக்குனரும், ஜெயிலர், பரியேறும் பெருமாள் உள்பட பல படங்களில் நடித்த பிரபல நடிகருமானவர் மாரிமுத்து (வயது 58). மேலும் இவர், சின்னத்திரை தொடர் ஒன்றில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர், சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து அவரது உடல் சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மாரிமுத்துவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள பசுமலைத்தேரிக்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி நேற்று காலை 6 மணி அளவில் அவரது உடல் பசுமலைத்தேரிக்கு வந்தடைந்தது. அப்போது அங்கிருந்த மாரிமுத்துவின் தாய், அக்காள், தம்பிகள் மற்றும் உறவினர்கள் அவரது உடலை கட்டிப்பிடித்து கதறி அழுதனர்.

உடல் தகனம்

பின்னர் மதியம் வரை அவர் பிறந்து வளர்ந்த சொந்த வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது நடிகர் விமல் பசுமலைத்தேரிக்கு வந்து அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதேபோல் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் மற்றும் மாரிமுத்து படித்த ஜி.ஆர்.டி. மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஊராட்சி தலைவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் மாரிமுத்துவின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மதியம் 1 மணிக்கு அவரது உடலுக்கு குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்யப்படடது. பின்னர் அங்கிருந்து 2 மணியளவில் பசுமலைத்தேரி சுடுகாட்டிற்கு அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாரிமுத்துவின் உடலுக்கு அவரது மகன் அகிலன் தீ மூட்டி, தகனம் செய்யப்பட்டது.

உயிரிழந்த மாரிமுத்துவின் தந்தை பெயர் குருசாமி. இவரது தாயார் மாரியம்மாள். இதில் குருசாமி இறந்துவிட்டார். மாரிமுத்துவுக்கு 4 அக்காள், 2 தம்பிகள் உள்ளனர். இவர், வருசநாடு அருகே உள்ள தர்மராஜபுரம் அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு வரையும், மயிலாடும்பாறை ஜி.ஆர்.டி. மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு வரையும் படித்துள்ளார். இதனால் அவர் அவ்வப்போது இந்த பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி நண்பர்களை சந்தித்து பேசுவது வழக்கம்.

முதல் படத்தில் தாய்-தந்தை

இதையடுத்து விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து கொண்டிருந்தார். அப்போது குற்றாலத்திற்கு சென்றபோது அங்கு சினிமா படப்பிடிப்பு நடந்தது. அதை பார்த்த மாரிமுத்துவுக்கு, இதேபோல் திரைத்துறையில் தானும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதனால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு அவர் சென்னைக்கு சென்றார். பின்னர் அவர் அங்கு பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து, பல திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். கடின உழைப்பின் மூலம் கடந்த 2008-ம் ஆண்டு முதன் முதலாக கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

தனது தாய், தந்தைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அந்த திரைப்படத்தில் வரும் ஒரு பாடலில் அவர்களை நடிக்க வைத்திருந்தார். சினிமா துறையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பிரபலங்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்கள் செய்யாத வகையில், தனது தாய், தந்தையை முதல் படத்தில் சிறு காட்சிகளில் தோன்ற வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்