2 வாலிபர்கள் மர்மச்சாவு
மானாமதுரை அருகே 2 வாலிபர்களை கொலை செய்து பள்ளத்தில் வீசியதாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மானாமதுரை அருகே 2 வாலிபர்களை கொலை செய்து பள்ளத்தில் வீசியதாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ரேடியோ செட்
சிவகங்கை மாவட்டம் கீழ கொம்புகர்ணன் கிராமத்தைச் சேர்ந்த செந்தூர்பாண்டி (வயது18) இவர் சிங்கக்குறுங்குளம் என்ற ஊரில் உள்ள ரேடியோ கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 24-ந்தேதி செந்தூர்பாண்டி தன்னுடைய நண்பர்களான ஜெயசூர்யா(18), பிரகாஷ், முத்துச்செல்வம் ஆகியோருடன் சேர்ந்து சிங்க குறுங்குளத்தில் உள்ள ரேடியோ செட்டில் வேலை செய்துவிட்டு மீண்டும் மாலை 5.30 மணி அளவில் ஊருக்கு சென்றனர்.
வழியில் பெட்ரோல் இல்லாததால் செந்தூா்பாண்டி மற்றும் ஜெயசூர்யா ஆகிய 2 பேரும் பெட்ரோல் போடுவதற்காக மானாமதுரை சென்றனர். அதன் பின்னர் அவர்கள் மீண்டும் திரும்ப வரவில்லை. இதைத்தொடர்ந்து செந்தூர்பாண்டியின் தந்தை பூமிநாதன் மானா மதுரை போலீசில் புகார் கொடுத்தார்.
மர்மச்சாவு
இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் காணாமல் போன செந்தூர்பாண்டி மற்றும் ஜெயசூர்யா ஆகிய 2 பேரும் மாங்குளம் அருகே ஒரு பள்ளத்தில் மர்மமான நிலையில் இறந்து கிடந்தனர். இது தொடர்பாக மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களின் உடல் பிரேத பரிசோதனை செய்யப் பட்டது.
இந்த நிலையில் இறந்துபோன 2 பேரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அந்த 2 பேரையும் முன்விரோதம் காரணமாக கொலை செய்து விட்டார்கள் என்றும் எனவே குற்றவாளிகளை கைது செய்யும் வரை 2 பேரின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறி சிவகங்கை மானாமதுரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைத்ததும் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி, சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தர்ராஜ், துணை போலிஸ் சூப்பரண்டுகள் கண்ணன், சி.பி.சாய் சவுந்தர்யன் மற்றும் சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, வட்டாட்சியர் தங்கமணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
இதில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மரியலை கைவிட்டனர். மேலும் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இறந்த 2 பேரின் பேரின் உடலையும் பெற்றுக்கொள்வோம் என்று தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.