விஷம் குடித்த கல்லூரி மாணவி சாவு

பாலக்கோடு அருகே வேறு இடத்தில் திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்ததால் காதலனுடன் விஷம் குடித்த கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார். காதலன் உயிர் ஊசலாடுகிறது.

Update: 2022-07-10 16:12 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே வேறு இடத்தில் திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்ததால் காதலனுடன் விஷம் குடித்த கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார். காதலன் உயிர் ஊசலாடுகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

காதல்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள ஜிட்டாண்டஅள்ளி கொல்லப்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன். இவருடைய மகள் சினேகா (வயது 19). இவர் பாலக்கோடு பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

ஜிட்டாண்டஅள்ளி அருகே உள்ள குளிக்காடு பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் தமிழரசு (18). இவர் தர்மபுரியில் உள்ள ஐ.டி.ஐ.யில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் 2 பேரும் பஸ்சில் செல்லும் போது பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. கடந்த வாரம் சினேகாவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய பெற்றோர் ஏற்பாடு செய்து வந்தனர்.

மாணவி சாவு

இதனால் காதல் ஜோடி கடந்த 7-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி பாலக்கோடு அருகே உள்ள முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டது. இதையடுத்து அவர்கள், நாங்கள் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். ஆனால் தற்கொலை செய்து கொள்ள போகிறோம் என குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு செல்போனில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி விட்டு விஷம் குடித்துள்ளனர்.

செல்போனில் வந்த தகவலை பார்த்து விட்டு 2 பேரின் உறவினர்களும் அலறி அடித்து கொண்டு அவர்கள் தெரிவித்த கோவிலுக்கு சென்று பார்த்தனர். அப் போது 2 பேரும் வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடி கொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை சினேகா பரிதாபமாக உயிரிழந்தார்.

தீவிர சிகிச்சை

காதலன் தமிழரசு மேல்சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அவரது உயிர் ஊசல் ஆடுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பாலக்கோடு ேபாலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.

காதல் ஜோடி விஷம் குடித்தது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வேறு இடத்தில் பெற்றோர் திருமண ஏற்பாடு செய்ததால் காதலனுடன் விஷம் குடித்த கல்லூரி மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்