திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையத்தில் வெள்ளநீரில் மிதந்த ஆண் சடலம் - அதிர்ச்சி சம்பவம்

திருநெல்வேலி, தூத்துக்குடியில் பெய்த அதிகன‌மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

Update: 2023-12-19 03:51 GMT

திருநெல்வேலி,

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக அதிகனமழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது.

கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால், மக்கள் மிகுந்த அவதியடைந்தனர். தற்போது திருநெல்வேலி, தூத்துக்குடியில் மழை ஓய்ந்துள்ளதால் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையத்தில் வெள்ளத்தில் ஆண் சடலம் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திப்பு பஸ் நிலையத்தில் முதியவரின் உடல் வெள்ளத்தில் மிதந்து வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த முதியவரின் உடலை கைப்பற்றி, உயிரிழந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்