பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் சக்தி நகரை சேர்ந்தவர் அன்பரசன். இவருடைய மகன் பிரதீப் (வயது 37). தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த 22-ந் தேதி பிரதீப் தனது நண்பரான சசிகுமாருடன் (37), மோட்டார் சைக்கிளில் நாமக்கல்லுக்கு சென்று கொண்டிருந்தார். கீரம்பூர் நான்கு ரோடு பகுதியில் குறுக்கே மொபட் ஒன்று வந்தது. இதனால் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி, மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் பிரதீப் படுகாயம் அடைந்தார். சசிகுமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பிரதீப் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.