விடிய விடிய சோதனை... அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி அறையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தை லஞ்ச ஒழிப்புத்துறையினர் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

Update: 2023-12-02 01:26 GMT

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையும் முடிவடைந்தது. ஆனால் மீண்டும் அமலாக்கத்துறை வழக்கை எடுக்காமல் இருக்க டாக்டர் சுரேஷ் பாபுவிடம் ரூ 1 கோடி லஞ்சம் கேட்டுள்ளார் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி.

இதனால் அச்சப்பட்ட டாக்டர் சுரேஷ் ஏற்கனவே ரூ20 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார். ஆனால் உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் தர வேண்டும் என்பதால் மேலும் ரூ51 லட்சம் லஞ்சம் கேட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் டாக்டர் சுரேஷ் பாபு புகார் தெரிவித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் ரசாயனம் தடவிய ரூ31 லட்சம் ரூபாய், அங்கித் திவாரியிடம் டாக்டர் சுரேஷ்பாபுவால் கொடுக்கப்பட்டது. இந்த லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்ட உடனேயே சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார் அங்கித் திவாரி. அவரை விரட்டிச் சென்ற திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார், மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வழிமறித்து கைது செய்தனர். அவரிடம் லஞ்சப் பணம் ரூ31 லட்சமும் மொத்தமாக கைப்பற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கித் திவாரியின் கூட்டாளிகள் யார்? அங்கித் திவாரி யாருக்கு எல்லாம் லஞ்சப் பணத்தை பங்கிட்டுக் கொடுத்தார் என பல மணிநேரம் லஞ்ச ஒழிப்புப் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். மேலும் மதுரையில் உள்ள அங்கித் திவாரி வீடு, மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று மாலை தொடங்கிய இந்த சோதனையானது, விடிய விடிய தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது, சி.ஆர்.பி.எப். போலீசார் இரவில் பாதுகாப்புக்காக வந்தனர். ஆனால், பாதுகாப்புக்கு வந்த சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு படையினருக்கு தமிழக காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் 5 மணி நேரமாக வெளியே காத்துக்கொண்டிருந்த அவர்கள், பின்னர் திரும்பிச்சென்றனர்.

மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தை தமிழக காவல்துறையினர் பாதுகாப்புடன் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் வீடு மற்றும் அவர் அலுவலகத்தில் பயன்படுத்தி்ய 3 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்திய நிலையில், தொடர்ந்து, வருகிற15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் நுழைந்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் பல மணிநேரம் அதிரடி சோதனை நடத்தியதும் அமலாக்கத்துறை அதிகாரியை சுற்றி வளைத்து கைது செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்