வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி திருநங்கைகள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா
மயிலாடுதுறையில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி திருநங்கைகள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறையில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி திருநங்கைகள் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
மயிலாடுதுறை ரெயிலடி கிட்டப்பா பாலம் அருகில் காவிரி கரையோரம் 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இவர்கள் இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக வேதனை தெரிவித்து வருகிறார்கள், மேலும் வீட்டின் உரிமையாளர்கள் வீட்டை காலி செய்ய சொல்லி வலியுறுத்தி வருவதாகவும் கூறி வருகிறார்கள்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற தொடர் இன்னல்களுக்கு நிரந்தர தீர்வாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்களுடைய குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை தரையில் வீசினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த சமூக நலத்துறை தாசில்தார் தையல்நாயகி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அறிவழகன், சுபஸ்ரீ, மகாதேவன் ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தைக்கு அவர்கள் உடன்படவில்லை. கலெக்டரிடம் நேரடியாக பேசி தீர்வு காணவேண்டும் என்று திருநங்கைகள் வலியுறுத்தினர். இதன் காரணமாக நேற்று காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மதியம் 3 மணி வரை நீடித்தது.
பரபரப்பு
இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் இல்லாத காரணத்தால், திருநங்கைகள் அனைவரையும் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் நேரில் அழைத்து பேசினார். இதனை அடுத்து திருநங்கைகள் அனைவரும் கலைந்து சென்றனர். 4 மணி நேரம் நடந்த இந்த தர்ணா போராட்டம் காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.