ஆபத்தான கிராம நிர்வாக அலுவலக கட்டிடம்

பொரவச்சேரி ஊராட்சியில் ஆபத்தான நிலையில் காணப்படும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டப்படுமா?என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2023-03-07 18:51 GMT

சிக்கல்:

பொரவச்சேரி ஊராட்சியில் ஆபத்தான நிலையில் காணப்படும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டப்படுமா?என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கிராம நிர்வாக அலுவலகம்

நாகை மாவட்டம் பொரவச்சேரி ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம், ஊராட்சி மன்ற அலுவலகம் பகுதியில் அமைந்துள்ளது. இந்த கட்டிடம் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பின்னர் கடந்த 2015-ம் ஆண்டு பராமரிப்பு பணி செய்யப்பட்டது. இந்த அலுவலகத்திற்கு பொரவச்சேரி, குற்றம்பொருத்தானிருப்பு பகுதிகளை சேர்ந்த மக்கள் சாதி சான்றிதழ், வருமானச்சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினந்தோறும் வந்து சென்றனர்.

ஆபத்தான நிலையில் உள்ளது

இந்த ஊராட்சியில் 3 ஆயிரத்து 500 வாக்காளர்களும், 1,400 குடும்ப அட்டைதாரர்களும் உள்ளனர். இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. கட்டிடத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. எந்தநேரத்திலும் கட்டிடம் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.இதை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கிராம நிர்வாக அலுவலகம் அருகில் உள்ள நூலக கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.

புதிதாக கட்ட வேண்டும்

தற்போது ஆன்லைனில் பல்வேறு சான்றிதழ்களை பதிவு செய்து பெற்று கொள்ளும் வசதி இருந்தாலும் முக்கிய சான்றிதழ்கள் நேரில் சென்று வாங்க வேண்டி உள்ளதால் சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்