வருசநாடு அருகே பயங்கரம்:தலையில் கல்லைப்போட்டு முதியவர் கொலை :ரேஷன் கடையில் தூங்குவதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி வெறிச்செயல்

வருசநாடு அருகே ரேஷன் கடையில் தூங்குவதில் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லைப்போட்டு முதியவர் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-07 18:45 GMT

ரேஷன் கடையில் தூக்கம்

வருசநாடு அருகே உள்ள கீழபூசனூத்து கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 72). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அவர் அதே கிராமத்தில் உள்ள தனது மகள் சின்னப்பொண்ணு வீட்டில் வசித்து வந்தார். இரவு நேரத்தில் மட்டும் லட்சுமணன் அங்கு உள்ள ரேஷன் கடை வராண்டாவில் படுத்து தூங்குவார்.

இவருடன், அதே கிராமத்தை சேர்ந்த தொழிலாளியான சதீஷ்குமார் (33) என்பவரும் இரவு நேரத்தில் ரேஷன் கடையில் தூங்கி வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேஷன் கடையில் தூங்குவது தொடர்பாக லட்சுமணன், சதீஷ்குமார் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது நீ இனி இங்கு தூங்க வந்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என சதீஷ்குமார் மிரட்டல் விடுத்தார்.

கனமழை

இதுகுறித்து அவரது பெற்றோரிடம் லட்சுமணன் தெரிவித்தார். இதனால் சதீஷ்குமாரை அவரது பெற்றோர் கண்டித்தனர். அதன்பிறகு லட்சுமணன் ரேஷன் கடைக்கு செல்லாமல் மகள் வீட்டிலேயே தூங்கி வந்தார். இதையடுத்து சதீஷ்குமார் விருதுநகருக்கு வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் லட்சுமணன் மீண்டும் ரேஷன் கடை வராண்டாவில் தூங்கி வந்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு சதீஷ்குமார் மீண்டும் கீழபூசனூத்து கிராமத்திற்கு வந்தார். இதனால் அச்சமடைந்த லட்சுமணன் அங்கு செல்லாமல் மகள் வீட்டில் தூங்கினார். இதற்கிடையே சதீஷ்குமார் ரேஷன் கடை வராண்டாவில் படுத்து தூங்கி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கீழபூசனூத்து கிராமத்தில் கனமழை பெய்தது. அப்போது வீட்டில் தூங்க இடம் இல்லாததால் லட்சுமணன் ரேஷன் கடைக்கு சென்றார்.

கல்லைப்போட்டு கொலை

அங்கு ஏற்கனவே தூங்கிக் கொண்டிருந்த சதீஷ்குமார் விழித்தெழுந்து லட்சுமணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது லட்சுமணன் மகள் சின்னப்பொண்ணு அங்கு சென்று, மழை பெய்து கொண்டிருப்பதால், இன்று ஒரு நாள் மட்டும் இங்கு தூங்கிக் கொள்ளட்டும் என சதீஷ்குமாரிடம் சமரசம் செய்து விட்டு சென்றார்.

இந்நிலையில் இரவு தூங்கி கொண்டிருந்தபோது முன்பகையை மனதில் வைத்திருந்த சதீஷ்குமார், கீழே கிடந்த கல்லை எடுத்து லட்சுமணனின் தலையில் போட்டார். இதில் அவர் ரத்த வௌ்ளத்தில் அங்கேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் சதீஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதற்கிடையே நேற்று காலை லட்சுமணன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தொழிலாளி கைது

இதுகுறித்து அவர்கள் வருசநாடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லட்சுமணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சதீஷ்குமாரை தேடி வந்தனர்.

அப்போது அந்த பகுதியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரேஷன் கடையில் தூங்குவதில் ஏற்பட்ட தகராறில் முதியவர் தலையில் தொழிலாளி கல்லைப்போட்டு கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்