பெரிய கருப்பசாமி கோவிலில் ஆடித்திருவிழா
எரியோடு அருகே பெரிய கருப்பசாமி கோவிலில் ஆடித்திருவிழா நடந்தது.;
எரியோடு அருகே ஆர்.கோம்பை தொப்பையசாமி மலையடிவாரம் வேர்புளி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரிய கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடித்திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி பக்தர்கள் 200-கும் மேற்பட்ட கிடாய்களை நேர்த்திக்கடனாக கோவில் நிர்வாகத்திடம் நேற்று முன்தினம் செலுத்தினர். அந்த கிடாய்கள் அனைத்தும் நேற்று அதிகாலையில் இருந்தே கோவில் முன்பு வெட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பெரியகருப்பசாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தது. மேலும் வெட்டப்பட்ட கிடாய்களின் இறைச்சியை சமைத்து கருப்பசாமிக்கு படையலாக வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதேபோல் கம்புகுத்திவிநாயகர், பெரிகாண்டியம்மன், கன்னிமார், முருகன், வைரவன் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து கிடாய் இறைச்சி கொண்டு சமைக்கப்பட்ட உணவு அன்னதானமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை பெறுவதற்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து அன்னதானத்தை சாப்பிட்டு சென்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையில் போலீசார் செய்து இருந்தனர்.
---