சேதமடைந்த விவசாய களத்தை சீரமைத்து தர வேண்டும்

சேதமடைந்த விவசாய களத்தை சீரமைத்து தர வேண்டும்

Update: 2023-06-04 18:45 GMT

சேகரையில் சேதமடைந்த விவசாய களத்தை சீரமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாய களம்

கூத்தாநல்லூர் அருகே உள்ள சேகரையில் மிளகுகுளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தையொட்டிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் 50 ஏக்கர் விவசாய நிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் நெல், உளுந்து பயறு, பருத்தி போன்ற பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் நெல் சாகுபடியில் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை உலர்த்தி, நெல்களை தனியாக எடுப்பதாக மிளகுகுளம் கிராமம் அருகே உள்ள ஒரு வயலையொட்டிய இடத்தில் கடந்த 80 ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு மூலம் விவசாய களம் அமைக்கப்பட்டது.

இந்த விவசாய களத்தை அந்த பகுதி விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களை அடிப்பதற்கும், நெல்களை உலர்த்தவும், நெல் மூட்டைகள் பிடிப்பதற்கும் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

களம் சரிந்து விழும் வாய்ப்பு

கடந்த சில தினங்களுக்கு முன்பு, விவசாய களம் அமைக்கப்பட்ட இடத்தில், விவசாயிகளிடம் எவ்வித தகவலும் தெரிவிக்காமல், களத்தை சுற்றிலும் 4 பகுதியிலும் மணல் அள்ளப்பட்டுள்ளது. இதற்கு அந்த பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தொடர்ந்து மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டது. ஆனாலும் விவசாய களத்தை சுற்றிலும் மணல் எடுக்கப்பட்டதால் விவசாய களம் தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் களம் சரிந்து விழும் வாய்ப்பு உள்ளது.

சீரமைக்க வேண்டும்

விவசாய களத்திற்கு சென்று வரக்கூடிய பாதை முழுவதும் மணல் அள்ளப்பட்டதால், அறுவடை செய்யக்கூடிய நெற்கதிர்களை விவசாய களத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. அதனால், நடப்பு ஆண்டு விவசாய பணிகளை தொடங்குவதற்கு முன்பாக மணல் எடுத்த இடம் பள்ளமானதால் அந்த பள்ளத்தில் மணலை கொட்டி சேதமடைந்த விவசாய களத்தை முழுவதும் சீரமைத்து தர வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்