குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார கேடு

விளார் அணுகுசாலையில் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது

Update: 2022-06-01 21:04 GMT

நாஞ்சிக்கோட்டை

தஞ்சை மேல வஸ்தாசாவடியிலிருந்து நாகை செல்வதற்கு 15 கிலோமீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. நாகை, வேளாங்கண்ணி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி செல்பவர்கள் எரிபொருள் சிக்கனம் கருதியும், கால விரயத்தை குறைக்கவும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் 7 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் விளார் செல்லும் வழியில் ஒரு மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

மேம்பாலம் அருகே பக்கத்து கிராமங்களுக்கு செல்வதற்கு அனைத்து இடங்களிலும் அணுகு சாலையும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் விளார் அணுகு சாலையின் இருபுறமும் குப்பைகள் அதிகளவு கொட்டப்பட்டு மலைபோல குவிந்து கிடக்கின்றன. இதனால், அந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மூக்கை பிடித்துக் கொண்டு தான் செல்கின்றனர். மேலும், அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது. இதனால், தொற்று நோய்கள் ஏற்படுேமா என்று அந்த பகுதியில் வசிப்பவர்கள் அச்சப்படுகின்றனர். ஆகவே, குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும், இனி இந்த இடத்தில் குப்பைகளை கொட்டாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






Tags:    

மேலும் செய்திகள்