சங்குமுள் சிக்குவதால் மீன்பிடி வலைகள் சேதம்

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் அதிகளவில் சங்குமுள் சிக்கி மீன்பிடிவலைகள் சேதம் அடைந்து வருவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2023-07-16 20:41 GMT

அதிராம்பட்டினம்:

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் அதிகளவில் சங்குமுள் சிக்கி மீன்பிடிவலைகள் சேதம் அடைந்து வருவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

சங்குமுள்

அதிராம்பட்டினம் சேற்று கடல் பகுதியில் சங்குமுள் அதிகமாக உள்ளது. இது கடலுக்கு அடியில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வருகிறது. இது ஒரு சங்கு இனத்தை சேர்ந்தது. தற்போது அதிராம்பட்டினம் பகுதியில் அதிக காற்று வீசுவதால் சங்குமுள்கள் அலையின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் மேல்நோக்கி வருகிறது.

அப்போது மீனவர்கள் மீன் பிடிக்க கடலில் வலையை விரிக்கும் போது சங்குமுள்கள் சிக்குகின்றன. வலையில் சிக்கிய சங்குமுள்களை எளிதில் அகற்ற முடியாது. சிரமப்பட்டு கவனத்துடன் அகற்ற வேண்டும்.

வலையில் சிக்குவதால் சேதம்

அப்படியும் மீனவர்கள் அகற்றும் போது கையை பதம்பார்த்து விடும். இந்த சங்குமுள் இறால், நண்டு, மீன், பிடிக்கும் வலைகளில் அதிகம் சிக்குகிறது. இதனால் வலைகள் சேதம் அடைவதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர். இவை எதற்கும் பயன் இல்லாத காரணத்தால் வலையில் இருந்து எடுக்கும் சங்குமுள்களை கடற்கரையோரத்தில் குவித்து வைத்துள்ளனர். இதுபற்றி மீனவர்கள் கூறுகையில் அதிராம்பட்டினம் கடற்பகுதியில் சங்குமுள்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன.. மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க வலையை விரிக்கும் போது சங்கமுள்கள் அதிக அளவில் சிக்குவதால் வலை சேதம் அடைகிறது. சங்குமுள்களை வலையில் இருந்து அவற்றை திரும்பி எடுக்க முடியாது.

விஷத்தன்மை கொண்டது

3 கடல்பாகத்தில் இருந்து 5 கடல்பாகம் வரை சேறு நிறைந்த பகுதிகளில் சங்குமுள் அதிகமாக வாழ்ந்து வருகிறது. சங்குமுள்கள் இருக்கும் பகுதி மீனவர்களுக்கு தெரியும். அங்கு வலையை விரிக்கமாட்டார்கள். தற்போது காற்று வேகமாக வீசுவதால் சங்குமுள் தங்களது இருப்பிடத்தை விட்டு மற்ற பகுதிகளுக்கு செல்கிறது. அப்போது மீனவர்கள் விரிக்கும் வலையில் சிக்கி விடுகிறது.

விஷத்தன்மை கொண்ட சங்குமுள் உடலில் குத்தினால் கடுமையான வலி ஏற்பட்டு புண்ணாகிவிடும். மிகவும் கவனமாக வலையில் இருந்து அவற்றை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்