சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

திட்டச்சேரியில் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-23 19:15 GMT

திட்டச்சேரி;

திட்டச்சேரியில் சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடிகால் அமைக்கும் பணி

திருமருகல் -நாகூர் இடையே நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக திட்டச்சேரி, திருமருகல், கட்டுமாவடி, சியாத்தமங்கை, ஏனங்குடி, திருப்புகலூர், வவ்வாலடி, திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி, போலகம், அண்ணாமண்டபம், குருவாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள், ஆஸ்பத்திரி செல்லும் நோயாளிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த சாலை வழியாக நாகூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்த நிலையில் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட கொந்தகையில் வடிகால் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது வீடுகளுக்கு குழாய்கள் மூலம் கேஸ் வழங்கும் நிறுவனம், மேற்கண்ட சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டி மூடி உள்ளனர்.

சேறும், சகதியுமாக...

அவ்வாறு மூடப்பட்ட மண், கடந்த சில நாட்களாக பெய்த மழையில் கரைந்து சாலை முழுவதும் பரவி தற்போது சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மேலும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு சேறும், சகதியுமாக உள்ள சாலையை சீரமைத்து மழை நீர் வடிவதற்கு வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்