தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-06-25 18:27 GMT

லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம்

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் இருந்து அரியலூர் கலெக்டர் அலுவலகம் வரை 12 வேகத்தடைகள் உள்ளது. இந்த வேகத்தடைகள் பெயரளவிற்கு போடப்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக வேகமாக செல்லும் லாரிகளால் அடிக்கடி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. சில லாரிகளில் வரம்புக்கு மீறி அதிக பாரத்துடன் 24 மணி நேரமும் இயங்குவதால் சாலைகளும் பழுதடைகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிக பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை வாகன தணிக்கை செய்யும், வேகத்தடைகளை ஆய்வு செய்து முறையான வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வி.கைகாட்டி.

கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதி

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கடைவீதியில் சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கால்நடைகள் சாலைகளில் மாலை நேரத்தில் படுத்து கொள்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

ராஜா, மீன்சுருட்டி.

கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது முனியங்குறிச்சி கிராமத்தில் சின்னேரி என்ற ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரிக்கரை வழியாக தினமும் பொதுமக்கள் அவரவர்களின் விவசாய நிலங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் ஏரிக்கரை முழுவதும் அதிகளவில் கருவேல மரங்கள் வளர்ந்து காடுபோல காட்சியளிக்கிறது. இதனால் அதனுள் விஷ பூச்சிகள், கதண்டுகள், பாம்புகள் குடியிருந்து வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், முனியங் குறிச்சி.

Tags:    

மேலும் செய்திகள்