'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-03-26 18:45 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெருநாய்கள் தொல்லை

நெல்லை தச்சநல்லூர் சீனியப்பன் திருத்து, செல்வவிக்னேஷ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அவை அந்த வழியாக செல்லும் பொதுமக்களை விரட்டுவதுடன் ஆடு, மாடு, கோழி போன்றவற்றையும் கடித்து குதறுகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வெளியில் சென்று வருகின்றனர். எனவே பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

-நம்பி, தச்சநல்லூர்.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

நாங்குநேரி தாலுகா கண்மணியன்குடியிருப்பில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் பரப்பாடியில் உள்ள பள்ளிக்கூடங்களில் படித்து வருகின்றனர். நாங்குநேரியில் இருந்து கண்மணியன்குடியிருப்பு வழியாக பரப்பாடிக்கு காலை, மாலையில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ்சில் ஏராளமான மாணவ-மாணவிகள் பயணம் செய்வதால் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. எனவே அந்த வழித்தடத்தில் காலை, மாலையில் கூடுதலாக டவுன் பஸ் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பூபதி, கண்மணியன்குடியிருப்பு.

சாலை வசதி தேவை

நெல்லை அருகே நரசிங்கநல்லூர் பஞ்சாயத்து சன்மதிநகரில் இருந்து மெயின் ரோட்டுக்கு செல்வதற்கு மண்பாதையே உள்ளது. அதில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால் மெயின் ரோட்டுக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை உள்ளது. எனவே சன்மதிநகரில் இருந்து மெயின் ரோட்டுக்கு செல்வதற்கு புதிய சாலை அமைக்க வேண்டும்.

-ரவிச்சந்திரன், சன்மதிநகர்.

சுகாதாரக்கேடு

பாளையங்கோட்டை வண்ணார்பேட்டை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி எதிரில் சாலையோர வாறுகாலில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே வாறுகாலை தூர்வாரி கழிவுநீரை வழிந்தோடச் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-மாரி மணிகண்டன், வண்ணார்பேட்டை.

பெண்களுக்கு சுகாதார வளாகம் அமைக்கப்படுமா?

அம்பை மெயின் பஜாரில் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் உள்ள நகராட்சி கட்டண சுகாதார வளாகத்தில் பெண்களுக்கென தனியாக சுகாதார வளாகம் இல்லை. இதனால் அந்த சுகாதார வளாகத்தை ஆண்கள் இல்லாத நேரத்தில் மட்டுமே பெண்கள் பயன்படுத்துகின்றனர். இதனால் பலரும் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி சுகாதார வளாகம் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

-உதயன், அம்பை.

ஓடை பாலத்தின் தடுப்பு சுவர் சேதம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மேல ரதவீதியில் இருந்து பாரதியார் தெருவுக்கு செல்லும் வழியில் உள்ள ஆவுடையார்குளம் மறுகால் ஓடை பாலத்தின் தடுப்பு சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் எதிர்பாராதவிதமாக ஓடைக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த தடுப்பு சுவரை சீரமைக்க வேண்டும்.

-கணேசன், திருச்செந்தூர்.

போக்குவரத்து நெருக்கடி

ஆத்தூரில் இருந்து சேர்ந்தபூமங்கலம் வழியாக புன்னக்காயல் செல்லும் சாலை குறுகலாக உள்ளது. சேர்ந்தபூமங்கலத்தில் சாலையின் இருபுறமும் வாய்க்கால்கள் உள்ளதால், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட சிரமமாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை அகலப்படுத்துவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டுக் கொள்கிறேன்.

-சண்முகவேல், காயல்பட்டினம்.

சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்

விளாத்திகுளம் அருகே வேம்பாரில் இருந்து சிலுவைபுரம், கீழசண்முகபுரம் வழியாக சூரங்குடி செல்லும் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. எனவே சாலையை ஆக்கிரமித்த முட்செடிகளை அகற்ற வேண்டும்.

-ஜெயமணிராஜா, கீழசண்முகபுரம்.

போக்குவரத்துக்கு இடையூறு

கழுகுமலை- கோவில்பட்டி ரோடு அம்பேத்கர்நகர் சாலை வளைவில் சேதமடைந்த பழைய பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் கட்டினர். பின்னர் பழைய பாலத்தின் கட்டிட இடிபாடுகளை சாலையோரமே விட்டு சென்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் பழைய கட்டிட இடிபாடுகளில் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே போக்குவரத்துக்கு இடையூறான கட்டிட இடிபாடுகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-மணி, கழுகுமலை.

ஊர் பெயர் பலகையில் எழுத்துகள் அழிப்பு

சாயர்புரம் பேரூராட்சி செந்தியம்பலம் ஊர் நுழைவுவாயில் அருகில் தமிழ், ஆங்கிலத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. அதில் உள்ள சில எழுத்துகள் அழிக்கப்பட்டு உள்ளதால், வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் ஊர் பெயரை சரியாக படிக்க முடியாமல் குழப்பமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சரிசெய்ய வேண்டுகிறேன்.

-ரெங்கராஜன், செந்தியம்பலம்.

குண்டும் குழியுமான சாலை

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் ஆவுடையானூர் மெயின் ரோடு சேதமடைந்து பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

-திருக்குமரன், கடையம்.

ஒளிராத தெருவிளக்கு

பாவூர்சத்திரம் அருகே பூலாங்குளம் ஈசுவரி அம்மன் கோவில் முன்புள்ள தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே அங்கு தெருவிளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-உதயசந்திரன், பூலாங்குளம்.

சாலையில் வீணாக செல்லும் குடிநீர்

கடையத்தில் இருந்து தென்காசி வழியாக கேரள மாநிலத்துக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. அந்த வழியாக அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களால் கடையம் மெயின் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அங்கு சாலையில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயிலும் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய கேட்டு கொள்கிறேன்.

-கண்ணன், கேளையாபிள்ளையூர்.

போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு வருமா?

சிவகிரி பஸ் நிலையத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வழியாக தென்காசி-மதுரை மெயின் ரோட்டுக்கு செல்லும் சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்வதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே சிவகிரி பஸ் நிலையத்தில் இருந்து வடக்கு தெரு வழியாக மெயின் ரோட்டுக்கு செல்லும் வகையில் ஒரு வழிப்பாதையை அமைத்து, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படுமா?

-கருப்பையா, சிவகிரி.

அடிப்படை வசதிகள் தேவை

தென்காசி நகராட்சி 23-வது வார்டு முப்பிடாதி அம்மன் கோவில் தெரு, அண்ணாநகர் பகுதியில் பல ஆண்டுகளாக சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.. இதனால் அப்பகுதி மக்கள் பக்கத்து தெருவுக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். எனவே அங்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டுகிறேன்.

-முத்து கோபாலகிருஷ்ணன், தென்காசி.

Tags:    

மேலும் செய்திகள்