'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-01-29 18:45 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவியில் இருந்து பத்தமடை, செவல் வழியாக நெல்லைக்கு காலையில் போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பயணம் செய்கின்றனர். எனவே அந்த வழித்தடத்தில் காலையில் கூடுதல் பஸ்களை இயக்குவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?

-ஜெரோ, சேரன்மாதேவி.

போக்குவரத்துக்கு இடையூறு

அம்பை கல்யாணி தியேட்டர் அருகில் போக்குவரத்துக்கு இடையூறாக ஏராளமான மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

-உதயன், அம்பை.

பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு

பாளையங்கோட்டை குலவணிகர்புரம் மாசிலாமணிநகர் மெயின் ரோடு அருகில் பாதாள சாக்கடை குழாயில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் பல நாட்களாக தெருவில் தேங்கியுள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதனை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-அந்தோணிராஜ், நெல்லை.

மின்பெட்டிக்கு மூடி தேவை

கூடங்குளம் பிள்ளையார் கோவில் முன்புள்ள மின்கம்பத்தில் மின்பெட்டி மூடியின்றி திறந்த நிலையில் உள்ளது. இந்த வழியாகத்தான் ஏராளமான மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடம் செல்கிறார்கள். எனவே ஆபத்தான மின்பெட்டிக்கு மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

வாறுகாலை தூர்வார வேண்டும்

வள்ளியூர்-திருச்செந்தூர் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை சர்வீஸ் ேராட்டின் மேல்பகுதியில் வாறுகாலில் அடைப்புகள் உள்ளதால் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே வாறுகாலை தூர்வாரி கழிவுநீர் முறையாக வழிந்தோடுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?

-சுப்பிரமணியன், வள்ளியூர்.

தெருவில் தேங்கும் கழிவுநீர்

ராதாபுரம் யூனியன் திருவம்பலாபுரம் பஞ்சாயத்து பார்க்கநேரி மேலூர் தெற்கு தெருவில் வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவில் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே அங்கு வாறுகால் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-பிரவின், பார்க்கநேரி.

குடிநீர் தட்டுப்பாடு

வள்ளியூர் அருகே கேசவநேரி 1-வது வார்டு பகுதியில் தெருக்குழாய்களில் குறைந்தளவே குடிநீர் வினியோகம் செய்வதால் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தெருக்குழாய் அருகில் பள்ளம் தோண்டி, அதற்குள் குடம் வைத்து தண்ணீர் பிடிக்கின்றனர். எனவே அங்கு கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-ராயல், கேசவநேரி.

சேதமடைந்த மின்கம்பம்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காமராஜர் நகர் தொடக்கப் பள்ளிக்கூடம் அருகில் உள்ள தெருவில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விழுந்ததால், பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பத்தின் அடிப்பகுதியில் கான்கிரீட் அமைத்து வலுப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-மணி, கழுகுமலை.

வேகத்தடை அவசியம்

குலசேகரன்பட்டினம் வடக்கூர் பைபாஸ் ரோடு சந்திப்பு பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும்.

-ராஜேஷ், குலசேகரன்பட்டினம்.

பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும்

உடன்குடி அருகே செட்டியாபத்து மெயின் ரோட்டின் அருகில் உள்ள பழமைவாய்ந்த மரம் பட்டுப்போன நிலையில் உள்ளது. அந்த மரத்தின் காய்ந்த கிளைகள் அடிக்கடி முறிந்து சாலையில் விழுகின்றன. எனவே பட்டுப்போன மரத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-ஸ்ரீராம், உடன்குடி.

தடுப்புச்சுவர் உயரம் அதிகரிக்கப்படுமா?

திருச்செந்தூர் தெப்பக்குளம் அரசமர விநாயகர் கோவில் எதிரில் உள்ள ஓடைப்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவரின் உயரம் குறைவாக உள்ளது. இதனால் அந்த வழியாக கோவிலுக்கு செல்கிறவர்கள் ஓடைக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே பாலத்தின் தடுப்புச்சுவர் உயரம் அதிகரிக்கப்படுமா?

-மோகனசுந்தரம், திருச்செந்தூர்.

குண்டும் குழியுமான சாலை

தென்திருப்பேரையில் இருந்து மாவடிபண்ணை வழியாக குரங்கணி செல்லும் சாலை சேதமடைந்து பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. இந்த வழியாகத்தான் ஏரல், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமானவர்கள் வாகனங்களில் சென்று வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-அரிகிருஷ்ணன், தென்திருப்பேரை.

புகாருக்கு உடனடி தீர்வு

தென்காசி மாவட்டம் கடையம் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்வதாக திருக்குமரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து உடனே குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

தென்காசி அருகே மேலகரம் பேரூராட்சி 14-வது வார்டு குடியிருப்பு சர்ச் தெருவில் உள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியின் மின்மோட்டார் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய தண்ணீர் வசதியின்றி அவதிப்படுகின்றனர். எனவே பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்து, காட்சிப்பொருளான குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பி பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?

-முருகன், மேலகரம்.

வாறுகாலில் அடைப்பு

ஆலங்குளம் தாலுகா தாழையூத்து வடக்கு தெருவில் வாறுகாலில் அடைப்புகள் உள்ளதால் கழிவுநீர் நிரம்பி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. சாலையிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே அங்கு வாறுகால் அடைப்புகளை அகற்ற வேண்டும்.

-சங்கீதா, தாழையூத்து.

குண்டும் குழியுமான சாலை 

பாவூர்சத்திரம் அருகே திப்பணம்பட்டியில் இருந்து நாட்டார்பட்டி, அரியப்புரத்துக்கு 2 ரெயில்வே கேட்டுகளை கடந்து செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

-செல்லையா, திப்பணம்பட்டி.

ஒளிராத தெருவிளக்கு

கீழப்பாவூர் யூனியன் குலசேகரப்பட்டி நுழைவுவாயில் அருகில் முத்துராமலிங்க தேவர் சிலை அருகில் புதிதாக அமைக்கப்பட்ட தெருவிளக்கு கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அங்கு தெருவிளக்கு மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-இசக்கிதுரை, குலசேகரப்பட்டி.

Tags:    

மேலும் செய்திகள்