'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-07 14:30 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா நடுவக்குறிச்சி கிராமம், திசையன்விளை- உடன்குடி சாலையில் அமைந்துள்ளது. இங்குள்ள நெடுஞ்சாலைத்துறை பெயர் பலகையில் ஊரின் பெயர் அழிந்து வெறுமனே காட்சி பொருளாக இருப்பதாக பிரசாசபுரத்தை சேர்ந்த வாசகர் ஜேசு கோபின் என்பவர், 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக தற்போது ஊர் பெயர் எழுதப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

கட்டணம் தடை செய்யப்படுமா?

பாபநாசம் அகஸ்தியர் அருவிக்கு நெல்லை மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குளிக்க வருகிறார்கள். ஆனால், வனத்துறை சார்பில் நபர் ஒருவருக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கொரோனா தொற்று காலத்துக்கு முன்பு வரை கட்டணம் வசூலிக்கப்படாமல் இருந்தது. எனவே, பழைய நடைமுறைப்படி கட்டணம் இல்லாமல் குளிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ரமணன் ராமசாமி, அகஸ்தியர்பட்டி.

நாய் தொல்லை

சேரன்மாதேவி தாலுகா கூனியூர் கிராமத்தில் முப்புடாதி அம்மன் கோவில் திடலில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இரவு 9 மணிக்கு மேல் வேலை முடிந்து வருவோரை விரட்டி விரட்டி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியவில்லை. மேலும் இரவில் குரைத்துக் கொண்டே இருப்பதால் அயர்ந்து தூங்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, நாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

ராமசுப்பிரமணியன், கூனியூர்.

தெரு விளக்கு எரியவில்லை

பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் கீழநத்தம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி குடியிருப்பு பகுதியில் உள்ள இ.டபிள்யூ.எஸ். குடியிருப்பு பகுதிகளில் தெருவிளக்கு கடந்த 15 நாட்களாக எரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈனமுத்து, கே.டி.சி.நகர்.

கிணற்றுக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

நாங்குநேரி யூனியன் இட்டமொழி பஞ்சாயத்து சுப்பிரமணியபுரத்தில் சேதம் அடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை உடைக்கும்போது, அருகே மக்கள் பயன்பாட்டில் உள்ள குடிநீர் கிணற்றின் சுற்றுச்சுவர் தவறுதலாக உடைந்து விட்டது. ஒரு மாதம் ஆகியும் இன்னும் சரிசெய்யப்படவில்லை. அப்பகுதியில் குழந்தைகள் விளையாடும் இடமாக இருப்பதால் நீர்த்தேக்க தொட்டி காங்கிரீட் கழிவுகளை அகற்றி, கிணற்றின் சுற்றுச்சுவர் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

லிங்கராஜ், சுப்பிரமணியபுரம்.

திறக்கப்படாத சுகாதார வளாகம்

ராதாபுரம் தாலுகா திருவம்பலாபுரம் பஞ்சாயத்து ஆத்தங்கரை பள்ளிவாசலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகின்றனர். இங்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்தது. பின்னர் பூட்டப்பட்டு இதுவரை திறக்கப்படவில்லை. எனவே, இதனை திறப்பதற்கு பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரவின்குமார், பார்க்கநேரி.

குடிநீர் குழாய் உடைப்பு

கோவில்பட்டி கடலையூர் ரோடு மறவர் காலனியில் இருந்து புதுக்கிராமம் செல்லும் தென் வடல் தெருவில் குடிநீர் குழாய் உடைந்து கடந்த 4 நாட்களாக தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

லக்சன்யா, கோவில்பட்டி.

பயணிகள் நிழற்கூடம் கட்டப்படுமா?

தூத்துக்குடி- நெல்லை நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள தட்டப்பாறை விலக்கு பஸ்நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால் வெயில் மற்றும் மழைக்காலத்தில் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, அங்கு பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ராமன், புதுக்கோட்டை.

அபாய பள்ளம்

தூத்துக்குடி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு சாலை பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி திருச்செந்தூர் சாலை பணியும் முடிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை தென்பாகம் போலீஸ் நிலையம் அருகே உள்ள வங்கியின் முன்பிருந்து தொடங்குகிறது. அங்கு தேவர்புரம் சாலை சந்திக்கும் இடத்தில் சுமார் 1 அடி அளவுக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்தில் சிக்குகின்றனர். எனவே, அபாய பள்ளத்தை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சங்கர் கணேஷ், தூத்துக்குடி.

ஆபத்தான மின்கம்பம்

திருச்செந்தூர் தாலுகா உடன்குடி பிறைகுடியிருப்பு கிராமம் தெற்கு தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று காங்கிரீட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சுந்தரலிங்கம், பிறைகுடியிருப்பு.

சாலையில் ஓடும் கழிவுநீர்

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நெல்லை- தென்காசி சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் எதிரே சாக்கடை கழிவு நீர், சாலையில் ஆறாக ஓடுகிறது. மாணவர்கள், பொதுமக்கள் நடந்து செல்லும்போது அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அவர்கள் மீது சாக்கடை கழிவுநீரை அள்ளித் தெளிக்கின்றன. இதனை தடுக்க பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

சுப்பிரமணியன், பாவூர்சத்திரம்.

மழைநீர் சேகரிப்பு தொட்டி

கடையம் யூனியன் அலுவலகம் எதிரே பாரதியார் திருமண மண்டபம் அருகே அரசு சார்பில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. தற்போது மழைநீர் சேகரிப்பு தொட்டியை காணவில்லை. மண்ணை போட்டு மூடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வழிப்பாதை ஆக்கப்பட்டுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

குணம், கடையம்.

போக்குவரத்துக்கு இடையூறான முள்மரங்கள்

கலிங்கப்பட்டியில் இருந்து மகாதேவர்பட்டி செல்லும் சாலை குறுகிய சாலையாகும். இந்தநிலையில் சாலையின் இருபுறமும் முள்மரங்கள் அடர்ந்து வளர்ந்து, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் இடையூறாக உள்ளது. எனவே, முள்மரங்களை வெட்டி அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

கவின் செல்வா, திருவேங்கடம்.

அடிபம்பு அமைக்கப்படுமா?

செங்கோட்டையில் நகரசபை முத்துசாமி பூங்கா உள்ளது. இங்கு வருபவர்கள், அங்குள்ள அடிபம்பில் தண்ணீர் அடித்து பயன்படுத்தி வந்தனர். பின்னர் நாளடைவில் அந்த அடிபம்பு முழுவதுமாக சேதமடைந்து விட்டது. பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை சரிசெய்யப்படவில்லை. தற்போது அந்த இடத்தில் ஆழ்துளை கிணறு மட்டும் தரைமட்ட அளவில் உள்ளது. அதில் இருந்து தண்ணீர் தானாக வெளியேறி வீணாகி வருகிறது. எனவே, பயன்பாடு இல்லாத இந்த ஆழ்துளை கிணற்றில் அடிபம்பு அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

கனியமுதன், செங்கோட்டை.

குண்டும், குழியுமான சாலை

திருவேங்கடம்- ராஜபாளையம் ரோட்டில் குலசேகரன்கோட்டை பஸ்நிறுத்தம் அருகே சுமார் 50 மீட்டர் அளவில் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் எதிர் திசையில் வருவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிதம்பரம், திருவேங்கடம்.

Tags:    

மேலும் செய்திகள்