'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடா்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-17 17:09 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடா்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் பயணிகளின் இருக்கைகள் உடைந்து கிடப்பதாக பாளையங்கோட்டையை சேர்ந்த சிவசண்முகவேல், 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக இருக்கைகள் சரிசெய்யப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சாக்கடை கழிவுகள் அகற்றப்படுமா?

பாளையங்கோட்டை மண்டல அலுவலகம் எதிரில் கழிவு நீர் ஓடையை சுத்தம் செய்து கழிவுகளை அள்ளி வெளியே குவித்து வைத்து விட்டு அதனை அகற்றாமல் சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சாக்கடை கழிவுகளை அள்ளிச் செல்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மாரிமுத்து, பாளையங்கோட்டை.

தாமிரபரணி குடிநீர் வினியோகம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி யூனியன் பாப்பான்குளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆலங்குளம் மற்றும் கண்மணியன்குடியிருப்பு கிராமங்களில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை குழாய் பதிக்கப்பட்டு கடந்த 10 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை தாமிரபரணி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. பொதுமக்கள் அனைவரும் உப்பு கலந்த ஆழ்குழாய் தண்ணீரையே குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மக்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, தாமிரபரணி குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

தனசிங், ஆலங்குளம்.

மூடி இல்லாத குடிநீர் தொட்டி

கன்னியாகுமரி- தூத்துக்குடி கடற்கரை சாலையில் திருவம்பலாபுரம் பஞ்சாயத்து உலக ரட்சகர்புரம் சாலை இணையும் இடத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தொட்டியின் மேல்புறம் மூடி இல்லாமல் உள்ளது. உள்புறம் பாசி பிடித்து தூசி படிந்துள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே, தொட்டியை சுத்தம் செய்து மூடி அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

பஸ் நிலையத்துக்குள் பஸ் வருமா?

நாகர்கோவிலில் இருந்து திசையன்விளை வழியாக திருச்செந்தூர் செல்லும் அரசு பஸ் (தடம் எண் 576) இரவு 9 மணிக்கு பிறகு பஸ்நிலையத்துக்குள் வராமல் காமராஜர் சிலை அருகின் வழியாக சென்று விடுகிறது. இதனால் பயணிகள் அனைவரும் சிரமப்படுகின்றனர். எனவே, பஸ் நிலையத்துக்குள் பஸ் வந்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

முருகன், திசையன்விளை.

வழிகாட்டி பலகை வேண்டும்

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பஜாரில் நான்கு வழிச்சாலை உள்ளது. இந்த சாலையில் வழிகாட்டி பலகை ஒன்று இருந்தது. ஆனால் தற்போது அதனை காணவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வழி தெரியாமல் திணறி வருகிறார்கள். எனவே, வழிகாட்டி பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணேசன், சாயர்புரம்.

பராமரிப்பு இல்லாத பயணிகள் நிழற்கூடம்

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கடலையூர் செல்லும் சாலையின் கிழக்கு பகுதியில் பயணிகள் நிழற்கூடம் உள்ளது. போதிய பராமரிப்பின்றி இருக்கைகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே, பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

பாலமுருகன், கோவில்பட்டி.

குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படுமா?

கயத்தாறு பேரூராட்சியில் 9 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அதில் இருந்து 3 மற்றும் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. இதனால் குடிநீர் மிகவும் கலங்கலாகவும், சுவையற்றதாகவும் உள்ளது. எனவே, நீர்த்தேக்க தொட்டிகளை உடனடியாக சுத்தம் செய்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சண்முகம், பாரதிநகர்.

போக்குவரத்து இடையூறு

உடன்குடி சத்தியமூர்த்தி பஜாரில் இருந்து செட்டியாபத்து செல்லும் மெயின் ரோட்டில் இருபுறமும் ஏராளமான பழுதான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இது போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த இடையூறாக உள்ளது. இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல சிரமப்படுகின்றன. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து சரிசெய்ய வேண்டுகிறேன்.

சாமுவேல்ராஜ், உடன்குடி.

நாய் தொல்லை

தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சமீப காலமாக நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான தெருக்களில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் விரட்டி செல்வதால் பல்வேறு விபத்துகளும் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடனேயே பயணித்து வருகின்றனர். ஆகவே, நாய் தொல்லையை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செந்தில், தூத்துக்குடி.

ஆபத்தான நிலையில் அரசு கட்டிடம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் யூனியன் அலுவலகத்திற்கு மேல்புறம் வாசுதேவநல்லூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் உள்ளது. இங்கு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை அலுவலகம் மற்றும் கிட்டங்கி செயல்பட்டு வருகிறது. வேளாண்மை விரிவாக்க மையம் கட்டப்பட்டு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தற்போது செடி கொடிகள் முளைத்து சுவற்றில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. இங்கு ஏராளமான விவசாயிகள் வந்து செல்வதால் இடிந்து விழும் நிலையில் உள்ள அந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு அனைத்து துறை அலுவலகங்களும் இயங்கக்கூடிய ஒருங்கிணைந்த வேளாண்மை மையத்தை திறப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலகிருஷ்ணன், வாசுதேவநல்லூர்.

பயணிகள் நிழற்கூடத்தில் ஆக்கிரமிப்பு

புளியங்குடி டி.என்.புதுக்குடியில் பள்ளிவாசல் பஸ்நிறுத்தம் தென்புறம் காமராஜர் சிலை எதிரே பயணிகள் நிழற்கூடம் உள்ளது. வெயிலுக்கு பயணிகள் நிழற்குடைக்குள் செல்ல முடியாதபடி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு குப்பைக்கூளங்களும் கிடக்கின்றன. எனவே நிழற்கூடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சகாயராஜ், வாசுதேவநல்லூர்.

சாலையில் பெரிய பள்ளம்

கடையம் மெயின் ரோட்டில் பெரிய பள்ளம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே பள்ளத்தை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்கிறேன்.

கண்ணன் கேளையாப்பிள்ளையூர்.

நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

கீழப்பாவூரில் இருந்து நெல்லைக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. காலை வேளையில் பாவூர்சத்திரம் மற்றும் ஆலங்குளம் மக்களுக்கு இந்த பஸ் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது கடந்த 2 மாதங்களாக அந்த பஸ் இயக்கப்படவில்லை. எனவே அந்த பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ரமேஷ், கீழப்பாவூர்.

ஆபத்தான மின்கம்பம்

கடையம் யூனியன் புங்கம்பட்டி சுடலைமாடன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. அதன் அருகில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. எனவே ஆபத்தான மின்கம்பத்தை மாற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருக்குமரன், கடையம்.

Tags:    

மேலும் செய்திகள்