'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-24 17:06 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காளியப்பர் தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் காங்கிரீட் பெயர்ந்து மோசமான நிலையில் இருப்பதாக வாசகர் பாலமுருகன் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக அந்த மின்கம்பத்தின் அடியில் காங்கிாீட் போடப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும, நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

பேனர் அகற்றப்படுமா?

நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய ரோட்டில் பெரிய ஆர்ச் வளைவு உள்ளது. அதில் ஒட்டப்பட்டுள்ள பேனர் தற்போது பாதியாக கிழிந்து தொங்கி கொண்டு இருக்கிறது. அந்த பேனர் முழுமையாக கிழிந்து கீழே விழுந்தால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே அந்த பேனரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

சந்தோஷ், நெல்லை.

காட்சிப்பொருளான நீர்த்தேக்க தொட்டி

நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி ஒன்றியம் தெற்கு வீரவநல்லூர் பஞ்சாயத்து அழகப்பபுரம் கிராமம் நாராயணசாமி கோவில் தெருவில் இரும்பு கம்பிகளால் மூடப்பட்ட பொது கிணறு உள்ளது. அந்த கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, அருகில் உள்ள நீர்த்தேக்க தொட்டிக்கு ஏற்றப்படுகிறது. அதில் இருந்து நல்லிகள் மூலம் பொதுமக்கள் தண்ணீர் பிடித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக மின்மோட்டார் பழுதாகி கிடப்பதால் தண்ணீர் தொட்டியும் காட்சிப்பொருளாக இருப்பதுடன், மின்மோட்டார் அறையும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. எனவே மின்மோட்டாரை சரிசெய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமச்சந்திரன், அழகப்பபுரம்.

ஆபத்தான மின்கம்பம்

திசையன்விளை பேரூராட்சி 2-வது வார்டு இட்டமொழி ரோடு சிவகாமி காமராஜர் அவென்யூ தெருவில் அமைந்துள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் காங்கிரீட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சீரமைக்க வேண்டுகிறேன்.

ஆல்பர்ட், திசையன்விளை.

குடிநீா் வினிேயாகம் சீராகுமா?

பாளையங்கோட்டை மகாராஜநகர், பொன்மணி காலனி பகுதியில் வீடுகளுக்கு குடிநீர் ஒழுங்காக வருவதில்லை. வாரம் ஒரு முறை ஒரு மணிநேரம் மட்டுமே திறந்துவிடுகின்றனர். அப்படி திறந்து விடும் நாட்களில் குறிப்பிட்ட கால நேரம் என்பது இல்லாமல் முறையாக திறந்து விடப்படுவதில்லை. எனவே வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை சீராக தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஹரிஹர சுப்பிரமணியன், பாளையங்கோட்டை.

பஸ் வசதி வேண்டும்

ராதாபுரம் தாலுகாவில் அரசு மருத்துவமனை மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு பஸ் வசதி கிடையாது. எனவே கன்னியாகுமரியில் இருந்து பழவூர், சிதம்பரபுரம், கீழ்குளம், ஊரல்வாய்மொழி, மதகநேரி, செம்பிகுளம், அழகநேரி, வடக்கன்குளம் வழியாக ராதாபுரத்துக்கு செல்வதற்கு பஸ்வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

பகவதி, ஊரல்வாய்மொழி.

பூங்கா அமைக்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஏரலும் ஒன்றாகும். சுற்றுவட்டார கிராமங்கள் தங்கள் தேவைகளுக்கு ஏரல் வந்து செல்கிறார்கள். ஆனால் ஏரலில் உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்கா இல்லாதது ஏமாற்றமாக உள்ளது. எனவே ஏரல் நகரில் பூங்கா அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

வீரமுத்துராஜ், மேலமங்கலகுறிச்சி.

குடிநீர் குழாய் வால்வு மூடி உடைப்பு 

கோவில்பட்டி புதுக்கிராமம் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் வால்வு திறக்கும் தொட்டியின் மூடி உடைந்துள்ளது. அதன் அருகில் அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளிக் குழந்தைகள் வந்து செல்லக்கூடிய பஸ்நிறுத்தமும் அமைந்துள்ளது. எனவே குடிநீர் குழாய் வால்வு தொட்டிக்கு மூடி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாரியப்பன், கோவில்பட்டி.

பஸ் வசதி தேவை

ஏரலில் இருந்து மங்களகுறிச்சி வழியாக ஸ்ரீவைகுண்டம் செல்வதற்கு பஸ் வசதி செய்து கொடுத்தால் இந்த பகுதி மக்கள் பெரிதும் பயன் அடைவர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- கொடிமுருகன், மேலமங்களகுறிச்சி.

தேங்கி கிடக்கும் மழைநீர்

தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலையில் சமீபத்தில் பெய்த மழையில், நான்கு வழிச்சாலையின் சர்வீஸ் ரோட்டில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. எனவே மழைநீரை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேம்படித்துரை, குறுக்குச்சாலை.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் யூனியன் சொக்கம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்பேத்கர் தெருவில் மாடசாமி கோவிலின் பின்புறம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. எனவே குப்பைத்தொட்டி வைத்து முறையாக குப்பைகளை அள்ளிச் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணி, கடையநல்லூர்.

தரைப்பாலம் அமைக்கப்படுமா?

கடையம் யூனியன் பொட்டல்புதூர் பஞ்சாயத்து வலங்காபுலியூர் பகுதியில் சாலையோரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக வாறுகால்கள் அமைக்கப்பட்டது. ஆனால் செக்கடி தெரு நுழைவுவாயிலில் மட்டும் வாறுகால் அமைக்கப்படவில்லை. இதனால் சாலையில் கழிவுநீர் செல்வதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு கழிவுநீரை தாண்டிச் செல்கின்றனர். எனவே அங்கு வாறுகால் அமைத்து சிறிய தரைப்பாலம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

திருக்குமரன், கடையம்.

போக்குவரத்து நெரிசல்

சங்கரன்கோவில் தெற்கு ரத வீதி, தேரடி திடல், கழுகுமலை சாலை, கச்சேரி ரோடுகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர். எனவே போக்குவரத்து நெரிசலை சரிசெய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திக், சங்கரன்கோவில்.

தாழ்வாக செல்லும் மின்வயர்கள்

புளியங்குடி இந்திரா நகரில் சுடலை மாடசாமி கோவில் அருகே சில வீடுகளின் மேற்கூரைகளின் மேல் மின்வயர்கள் தாழ்வாக செல்கின்றன. அருகே மரங்களும் இருப்பதால் பலத்த காற்று வீசும் போது ஒன்றுக்குகொன்று உரசி தீப்பொறிகள் பறக்கின்றன. மேலும் குழந்தைகள் விளையாடும் இடமாக இருப்பதால் மின்வயர்களை சற்று உயர்த்தி கட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

செல்வம், இந்திராநகர்.

பழுதடைந்த குடிநீர் குழாய்

கடையநல்லூர் யூனியன் சொக்கம்பட்டி பஞ்சாயத்து 4-வது வார்டு நேரு தெருவில் குடிநீர் குழாய் பழுடைந்து உள்ளது. இதனால் தண்ணீர் வினியோகிக்கப்படும்போது குடிநீர் பீறிட்டு வெளியேறுகிறது. மேலும் கழிவுநீர் வாறுகாலை ஒட்டி அமைந்திருப்பதால், கழிவுநீரும் குடிநீருடன் கலக்கும் வாய்ப்புகள் உள்ளது. எனவே குடிநீர் குழாயை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், சொக்கம்பட்டி.

Tags:    

மேலும் செய்திகள்