சுழன்றடித்த சூறைக்காற்று: 1,600 ஏக்கர் வாழை, நெற்பயிர்கள் சேதம்

சுழன்று அடித்த சூறைக்காற்றால் 1,600 ஏக்கர் வாழை மற்றும் நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

Update: 2023-06-09 00:09 GMT

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு வரை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. இதில் கறம்பக்குடி பகுதியில் அதிக மழை இல்லை. ஆனால் இரவு 8 மணிக்கு தொடங்கி 10 மணி வரை பகுதி வாரியாக விட்டு விட்டு சூறைக்காற்று வீசியது. சுற்றி சுழன்று அடித்த இந்த காற்றால் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மற்றும் நெற்பயிர்கள் பெருமளவில் சேதமடைந்து உள்ளன.

குறிப்பாக கறம்பக்குடி அருகே உள்ள சூரக்காடு, வெட்டன் விடுதி, கருப்ப கோன் தெரு, திருமணஞ்சேரி, கோட்டைக்காடு, பட்டத்திக்காடு, கருக்காக்குறிச்சி, வாணக்கன்காடு, சவேரியார்பட்டினம், மழையூர் உள்ளிட்ட பகுதிகளில் தார் விட்டு அறுவடை தருவாயில் இருந்த சுமார் 500 ஏக்கர் வாழைகள் சாய்ந்து சேதமாகின.

விவசாயிகள் கண்ணீர்

இதேபோல் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சுமார் 100 ஏக்கர் நெற்பயிர்களும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் இந்த பகுதி விவசாயிகள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.

வானம் பார்த்த பூமி என்பதால் ஆழ்குழாய் பாசனம் மூலம் இரவு பகலாக விழித்திருந்து தண்ணீர் பாய்ச்சி வளர்த்த வாழை மரங்கள் பலன் கிடைக்கும் வேளையில் முறிந்து சாய்ந்து கிடப்பதை பார்த்து சில விவசாயிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகாடு, ஆலங்குடி

வடகாடு, ஆலங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

இந்த காற்று, மழையால் அந்த பகுதிகளில் சுமார் 1,000 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த, நெல், வாழை, சோளம் மற்றும் பலா, வேம்பு மற்றும் தென்னை மரங்கள் வேரோடு ஆங்காங்கே சாய்ந்தன.

Tags:    

மேலும் செய்திகள்