லண்டனில் டாக்டராக உள்ளேன்.. திருமண ஆசை காட்டி சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ. 4.38 லட்சம் மோசடி

காரைக்குடியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரிடம் திருமண ஆசை காட்டி மோசடி செய்த பெண் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-08-09 18:41 GMT

சிவகங்கை:

காரைக்குடி அருகே பாரிநகர் சாப்ட்வேர் இன்ஜினியர் ஸ்ரீதர் (வயது 35). இவர் மும்பையில் உள்ள சாப்ட்வேர் கம்பெனி ஒன்றுக்கு வீட்டில் இருந்தே பணி செய்கிறார். திருமணம் ஆகவில்லை. இதனால் திருமண தகவல் மையம் ஒன்றில்பெண் தேவை என விளம்பரம் செய்துள்ளார்.

இதை தொடர்ந்து செல்போனில் பேசியபெண் ஒருவர் தான் லண்டனில் டாக்டராக இருப்பதாகவும், உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய ஸ்ரீதரிடம் நான் நேரடியாக புதுடில்லிக்கு வருகிறேன். அங்கிருந்து காரைக்குடி வருவதாக சொல்லியுள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் தான் டில்லி ஏர்போர்ட்டில் சுங்கத்துறையினர் விசாரணையில் சிக்கி விட்டேன். கையில் பணம் இல்லை. எனக்கு பணம் அனுப்பினால் அங்கிருந்து வருவதாக கூறியுள்ளார். இதை நம்பிய ஸ்ரீதர், அவரது வங்கி கணக்கில் இருந்து பெண் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 1 ம் தேதி வரை பல கட்டமாக ரூ.4.38 லட்சம் போட்டுள்ளார். மீ்ண்டும் ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளார்.

இதனால் தானே நேரடியாக புதுடில்லி வருகிறேன் என்று கூறிய ஸ்ரீதர் டெல்லி சென்று பார்த்தார். ஆனால் அப்படி யாரும் இல்லை என்று தெரியவந்தது. தன்னை அந்த பெண் மோசடி செய்ததை அறிந்தார்.

இது குறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் அளித்தார். அவரது உத்திரவின் படி சிவகங்கை சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

போலீஸ் விசாரணையில் அலைபேசி டவர் மேற்கு வங்கத்தில் காட்டுவது தெரிந்தது. இதைத்தொடர்ந்து மோசடி பெண்ணின் வங்கி கணக்கை முடக்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்