நல்ல மகசூலால் கைகொடுக்கும் கோழிகொண்டை பூ சாகுபடி

நல்ல மகசூலால் கைகொடுக்கும் கோழிகொண்டை பூ சாகுபடி

Update: 2022-12-09 20:04 GMT

தஞ்சை மாவட்டத்தில் நல்ல மகசூலால் கைகொடுக்கும் கோழி கொண்டை பூ சாகுபடியால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோழி கொண்டை பூ

தஞ்சை மாவட்டத்தில் நெல், கரும்பு, பருத்தி, உளுந்து மட்டுமின்றி மல்லிகை, செண்டிப்பூ, கோழி கொண்டை பூ சாகுடியும் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு கோழி கொண்டை பூ சாகுபடி செய்வதில் சிறு விவசாயிகளின் கவனம் திரும்பி உள்ளது. காரணம் இந்த வகை பூச்செடிகளை சாகுபடி செய்வதற்கான செலவு மற்றும் தண்ணீர் தேவை மிக குறைவு.

மேலும், பூக்களை பல நாட்கள் பறிக்காமல் இருந்தால் கூட வாடுவதில்லை. இதனால் தேவைப்படும் போது பூக்களை பறித்துக்கொள்ளலாம்.

இதுகுறித்து ஒரத்தநாடு காராமணிதோப்பு கிராமத்தை சேர்ந்்த விவசாயி கோவிந்தராஜ் கூறுகையில், கரும்பு, வாழை உள்ளிட்ட ஆண்டு பயிர்களில் இருந்து கிடைக்கும் வருமானம் அதிகம் தான்.

தேவை அதிகம்

ஆனால் அதற்காக வருடம் முழுவதும் உழைப்பு தர வேண்டும், தண்ணீர் தேவையும் அதிகம் ஆனால் குறுகிய கால பயிர்களை பயிரிடும் போது குறைந்த நாட்களில் வருவாயை ஈட்டலாம், செலவும் குறைவு. நான் ஒரு ஏக்கரில் கோழி கொண்டை பூ சாகுபடி செய்துள்ளேன். சாகுபடி செய்த 40-வது நாளில் பூக்கள் பூக்க தொடங்கிவிட்டன. தொடர்ந்து 90-ல் இருந்து 100 நாட்கள் வரை பூ கிடைக்கிறது. நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வாரத்துக்கு ஒரு முறை மருந்து தெளித்து வருகிறேன்.பொதுவாக பூ சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் பண்டிகை, கோவில் திருவிழா காலங்கள், சுப முகூர்த்த நாட்கள் அதிகம் கொண்ட மாதங்களில் பூக்கள் அறுவடைக்கு வரும் படி பயிர்சாகுபடி செய்ய வேண்டும்.

நல்ல மகசூல்

இந்த காலங்களில் பூக்கள் மாலை கட்டுவதற்காக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. எனவே, பூக்களில் தேவை அதிகரிக்கும் போது சந்தைகளில் பூக்களுக்கான விலை ஏறுமுகமாக இருக்கும். குறிப்பாக கோழி கொண்டை பூ சந்தைகளில் சராசரியாக ரூ.40 முதல் ரூ.60 வரை விலை கிடைக்கும் போது மூன்று மாதத்துக்கு ரூ.60 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். தற்போது 3 மாதத்தில் சுமார் ஒன்றரை டன் வரை நல்ல மகசூல் கிடைத்துள்ளது. இதனால் நல்ல லாபத்தையும் அடைந்துள்ளேன். அதுமட்டுமின்றி கோழி கொண்டை பூ சாகுபடியில் சந்தேகங்கள் இருந்தால் தோட்டக்கலைத் துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு பயன் பெறலாம் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்