முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த கடலூர் வாலிபர் சிறையில் அடைப்பு

முதல் திருமணத்தை மறைத்து 2-வது திருமணம் செய்த கடலூர் வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2023-10-19 19:14 GMT

காதல் திருமணம்

கடலூர் மாவட்டம் மேலக்கல்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் ராசு. இவருடைய மகன் விக்னேஷ் (வயது 25). இவர் கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள கழுதூர் கிராமத்தை சேர்ந்த கார்த்திகா (25) என்பவரை கடந்த 2022-ம் ஆண்டு பெற்றோருக்கு தெரியாமல் காதலித்து திண்டுக்கல்லில் பதிவு திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்கள் 2 பேரும் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஒரு வாடகை வீட்டில் கணவன்-மனைவியாக வசித்து வந்தனர்.

இந்தநிலையில் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற விக்னேஷ் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். இதையடுத்து அவரது பெற்றோர் விக்னேசுக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள இறையூரில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் செய்து வைத்தனர். பின்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறையில் அடைப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த கார்த்திகா மங்களமேடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது மணக்கோலத்தில் இருந்த விக்னேஷ் மற்றும் அவரது பெற்றோர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது விக்னேஷ் கார்த்திகாவை திருமணம் செய்து கொண்டதை ஒப்புக்கொண்டார். மேலும் இந்த சம்பவத்தில் தனது பெற்றோருக்கு தொடர்பு இல்லை என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, மணப்பெண் விக்னேஷ் கட்டிய தாலியை போலீசார் முன்னிலையில் கழட்டி கொடுத்தார். இதனைதொடர்ந்து விக்னேஷ் குன்னம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பெரம்பலூர் கிளைச்சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும் அவரது பெற்றோர் உள்பட 4 பேரையும் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்