கடலூர்: பயிற்சியின்போது ஈட்டி தலையில் பாய்ந்து மாணவன் மூளைச்சாவு

கடலூர் மாவட்டம் வடலூரில் பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்த மாணவன் மூளைச்சாவு அடைந்தார்.

Update: 2024-07-29 13:12 GMT

கடலூர்,

கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்ற 15 வயது மாணவன் வடலூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 24-ம் தேதி கிஷோர் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளி முடிந்ததும் மாலையில் பள்ளியில் உள்ள விளையாட்டு திடலில் கிஷோர் வட்டு எறியும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அதே திடலில் மறு முனையில் ஈட்டி எறியும் பயிற்சி நடைபெற்றுள்ளது. மாணவன் கிஷோர் எறிந்த வட்டை எடுக்க சென்ற நேரத்தில் மற்றொரு மாணவர் ஈட்டியை வீச அந்த ஈட்டி கிஷோரின் தலையில் பாய்ந்தது. இதையடுத்து கிஷோருக்கு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மாணவன் அங்கிருந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு மாணவன் அங்கிருந்து விழுப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு மாணவன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக மாணவன் உயிர்பிழைக்க மாட்டார் என்றும் மூளைச்சாவு அடைந்து விட்டதால் அவர் கோமா நிலையில் இருப்பார் என்றும் தெரிவித்தனர். இதைக் கேட்ட அவரது குடும்பத்தினர் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதனை அறிந்த மாணவனின் தாய் உடனடியாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் வடலூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

மாணவனின் இந்நிலைக்கு பள்ளி நிர்வாகமே காரணம் என பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிறிய திடல் உள்ள பள்ளியில் ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதல் பயிற்சிகளை ஒரே இடத்தில் நடத்துவது தவறு. இதன் காரணமாகவே மாணவன் கோமா நிலைக்கு சென்றுள்ளார் என்று வடலூர் காவல் நிலையத்தில் மாணவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனின் உடல் உறுப்புகளை தானம் செய்யும் பணியில் அவரது உறவினர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்