புதுச்சேரியில் சொகுசு கப்பலுக்கு அனுமதி மறுப்பு; 2-வது முறையாக திருப்பி அனுப்பப்பட்டது

தடையை மீறி 2-வது முறையாக புதுச்சேரி கடற்பரப்புக்கு வந்த சொகுசு கப்பலை கடலோர காவல்படையினர் திருப்பி அனுப்பினர்.

Update: 2022-06-12 07:26 GMT

புதுச்சேரி,

தமிழக மக்களுக்கு சொகுசு கப்பலின் புதிய அனுபவத்தையும், திகில் நிறைந்த ஆழ்கடல் பயண அனுபவத்தையும் அளிக்கும் வகையில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை ஏற்பாட்டில் 'கார்டிலியா குருயிசஸ்' என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

அதன்படி, மக்களின் சொகுசு சுற்றுலா பயணத்துக்காக சென்னை துறைமுகத்தில் இருந்து 'எம்பிரஸ்' எனும் சொகுசு கப்பல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சொகுசு கப்பல் பயன்பாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துறைமுகத்தில் கடந்த 4-ந்தேதி தொடங்கி வைத்தார். இதில் முன்பதிவு செய்து ஏராளமான மக்கள் கப்பலில் சுற்றுலா சென்று வருகின்றனர்.

சென்னையில் இருந்த புதுச்சேரி, விசாகப்பட்டினத்துக்கு சொகுசு கப்பலில் மக்கள் பயணம் செய்யும் வகையில் சொகுசு கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 5 நட்சத்திர ஓட்டல் போன்ற வசதிகளை உள்ளடக்கிய இந்த சொகுசு கப்பல் 700 அடி நீளம் கொண்டது. அடுக்கடுக்காக 11 தளங்களை கொண்ட இந்த கப்பலில் மொத்தம் 796 அறைகள் இருக்கின்றன.

மேலும் 4 பெரிய உணவகங்கள், மதுக்கூடம் (பார்), உடற்பயிற்சி கூடம் (ஜிம்), சினிமா தியேட்டர்கள், ஸ்பா, மசாஜ் சென்டர், யோகாசனம் செய்யும் இடம், நீச்சல் குளம், கேசினோ (சூதாட்ட கிளப்புகள்), நூலகம், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி, கப்பலின் ஓரம் அமர்ந்து கடல் அழகை கண்டுகளிக்கும் கூடம் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்துள்ளன.

இந்நிலையில், சென்னையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு வந்த சொகுசு கப்பல் அனுமதி இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டது. இந்த சொகுசு கப்பலில் கலாச்சார சீர்கேடு உள்ள செயல்பாடுகள் உள்ளதாகக் கூறி, புதுச்சேரி அரசு அனுமதி மறுத்தது. இதனால் சொகுசு கப்பலை கடலோர காவல்படை திருப்பி அனுப்பியது.

மேலும் புதுச்சேரி கடற்பரப்புக்கு வருவதற்கு சொகுசு கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், தடையை மீறி 2-வது முறையாக புதுச்சேரி கடற்பரப்புக்கு வந்த சொகுசு கப்பலை கடலோர காவல்படையினர் திருப்பி அனுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்