பொங்கல் பொருட்கள் வாங்க அலைமோதிய மக்கள் கூட்டம்

விழுப்புரத்தில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2023-01-14 18:45 GMT

விழுப்புரம்:

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று(ஞாயிற்றுக்கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் புதுப்பானையில் பொங்கலிடும் மரபிற்காக குயவர்களால் பொங்கல் பானைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பொங்கலுக்கு பெயர்போன கரும்புகளும் விற்பனைக்கு வந்துள்ளன. கடந்த ஆண்டை காட்டிலும் கரும்புகள் சற்று விலை உயர்ந்து காணப்பட்டது.

பொருட்கள் விற்பனை

கடந்த ஆண்டு 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.600 முதல் ரூ.650 வரையும், ஒரு ஜோடி கரும்புகள் ரூ.60 முதல் ரூ.65 வரையும் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.700 வரையும், ஒரு ஜோடி கரும்புகள் ரூ.70 முதல் ரூ.80 வரையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கரும்பு விலை உயர்ந்தாலும் அதை பொருட்படுத்தாமல் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக மார்க்கெட் மற்றும் கடைவீதிகளுக்கு திரண்டு சென்று ஆர்வமுடன் கரும்புகளை வாங்கிச்சென்றதை காணமுடிந்தது.

அதுபோல் பொங்கல் விற்பனையில் அங்கம் வகிக்கும் மஞ்சள் கொத்து மற்றும் சிறுவள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு போன்ற கிழங்கு வகைகளும், காய்கறி வகைகளும் விழுப்புரம் எம்.ஜி. சாலையில் உள்ள பெரிய மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த கரும்புகள், மஞ்சள் கொத்து மற்றும் கிழங்கு வகைகள், காய்கறி வகைகள் என பொங்கல் பண்டிகையை கொண்டாட தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிச் சென்றனர்.

இதனால் பொங்கல் பொருட்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் பொருட்களை வாங்க விழுப்புரம் நகரில் நேற்று எம்.ஜி.சாலை பெரிய மார்க்கெட், பாகர்ஷா வீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

கடும் போக்குவரத்து நெரிசல்

மேலும் மார்க்கெட்டிற்குள் பொருட்கள் வாங்கச்சென்றவர்களாலும், பொருட்களை வாங்கிவிட்டு வெளியே வந்தவர்களாலும் விழுப்புரம்-புதுச்சேரி சாலை, கே.கே.சாலை, பாகர்ஷா வீதி, திரு.வி.க. வீதி, காமராஜர் வீதி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலை சமாளிக்க போக்குவரத்து போலீசார் கூடுதலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டு போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இருப்பினும் நேற்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் அனைத்தும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி ஊர்ந்து சென்றதை காண முடிந்தது.

போலீசார் தீவிர கண்காணிப்பு

மேலும் இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் யாரேனும் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க நகரின் முக்கிய இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக விழுப்புரம் வீரவாழியம்மன் கோவில் அருகிலும், பழைய பஸ் நிலையம், காமராஜர் வீதி, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து, போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்