திருத்தணி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்; 5 மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்

திருத்தணி முருகன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. பொதுவழியில் 5 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-01-02 10:32 GMT

திருத்தணி முருகன் கோவில்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும். இந்த திருக்கோவிலில் நேற்று ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. திருப்படி திருவிழாவினை தொடர்ந்து புத்தாண்டினை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. அதைத்தொடர்ந்து, மூலவருக்கு தங்க கிரீடம், தங்கவேல், பச்சை மாணிக்க மரகதகல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதையடுத்து, நேற்று சிறப்பு தினத்தையொட்டி, வசந்த மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8 மணிக்கு, தங்கத் தேரில், உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பக்தர்கள் தரிசனம்

இந்த நிலையில், நேற்று ஆங்கில புத்தாண்டு மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், வழக்கத்திற்கு மாறாக மலைக்கோவிலில், அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இரவு 9 மணி வரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர்.

இதனால் பொதுவழியில், 5 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்து சென்றனர். இதேபோல் 100 ரூபாய் சிறப்பு கட்டண வரிசையில் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்து சென்றதை காண முடிந்தது.

போலீசார் பாதுகாப்பு

இதற்கான ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். புத்தாண்டு தினத்தையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் மேற்பார்வையில், திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். படித்திருவிழா மற்றும் புத்தாண்டு சிறப்பு தரிசனத்தையொட்டி, திருத்தணி மலைக்கோவில் முழுவதும், வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

நடிகர் யோகிபாபு வருகை

பிரபல சினிமா நகைச்சுவை நடிகர் யோகிபாபு புத்தாண்டை முன்னிட்டு முருகப்பெருமனை தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மலைக்கோவிலுக்கு வந்தார்.

அங்கே வி.ஐ.பி.க்கள் செல்லும் பாதையில் செல்வதற்காக சுமார் 1 மணி நேரம் காத்திருந்தும் கோவில் நிர்வாகம் அவரை அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து நடிகர் யோகிபாபு காத்திருந்து சாமி தரிசனம் செய்து சென்றார். இந்த நிலையில் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் யோகிபாபுவை கண்டவுடன் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

சிறுவாபுரி கோவில்

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பவானி அம்மன் கோவில்

இதே போன்று எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காலை முதல் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நேற்று ஆங்கில புத்தாண்டு மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் பெரியபாளையத்தில் குவிந்தனர். இதனால் பெரியபாளையம் -சென்னை, பெரியபாளையம்-ஊத்துக்கோட்டை, பெரியபாளையம்-ஆரணி ஆகிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்துக்கு ஊர்ந்து சென்றன.

Tags:    

மேலும் செய்திகள்