மொபட் விற்பதாக கல்லூரி மாணவியிடம் ஆன்லைனில் நூதன மோசடி

மொபட் விற்பதாக கல்லூரி மாணவியிடம் ஆன்லைனில் நூதன மோசடி செய்த நபரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2023-01-30 05:42 GMT

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவருடைய மகள் நாகதர்சினி (வயது 19). இவர், ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும் என ஆன்லைனில் தேடினார்.

அப்போது ரூ.25 ஆயிரத்துக்கு மொபட் விற்பனைக்கு இருப்பதாக விளம்பரத்தை கண்டார். அதில் விற்பனைக்கு உள்ள மொபட்டுடன், ராணுவ அதிகாரி போன்ற சீருடையில் ஒருவரது புகைப்படமும் இடம்பெற்றிருந்தது. அதில் இருந்த செல்போனில் நாகதர்சினி தொடர்பு கொண்டார். அப்போது அந்த ஆசாமி, "நான் ராணுவத்தில் பணிபுரிகிறேன். பணி மாறுதல் காரணமாக அவசரமாக டெல்லி செல்ல உள்ளதால் எனது மொபட்டை விற்கிறேன். ராணுவத்தில் இருப்பதால் என்னால் மொபட்டை நேரில் வந்து தரமுடியாது. பார்சல் சர்வீசில் அனுப்புகிறேன்" என்றார்.

பின்னர் இதற்காக மாணவியிடம் இருந்து சிறுக சிறுக என மொத்தம் ரூ.20 ஆயிரம் வரை ஆன்லைன் மூலம் பணத்தை பெற்றுக்கொண்டார். ஆனால் சொன்னபடி மாணவிக்கு மொபட்டை பார்சல் சர்வீசில் அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, இதுபற்றி ராமாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், மொபட் விற்பதாக கூறியவர் உண்மையிலேயே ராணுவ அதிகாரியா? அல்லது மோசடி செய்யும் நோக்கில் செயல்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்