திருச்சபை கட்ட அனுமதி கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விடிய, விடிய கிறிஸ்தவ மக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சபை கட்ட அனுமதி கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விடிய, விடிய கிறிஸ்தவ மக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்
திருச்சபை கட்ட அனுமதி கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விடிய, விடிய கிறிஸ்தவ மக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சபை கட்ட அனுமதி
திருப்பூர் மண்ணரையை சேர்ந்தவர் அருண் அந்தோணி. கிறிஸ்தவ மத போதகர். இவர் அந்த பகுதியில் பெத்தேல் ஏ.ஜி.சபை என்ற திருச்சபையை நடத்தி வருகிறார். இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஊத்துக்குளி ரோடு சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் சொந்தமாக இடம் வாங்கி, அதில் திருச்சபை கட்ட சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த சிலர் சபை கட்டுமான பணியை தடுத்து நிறுத்தினார்கள். மேலும் அருகில் உள்ள அரசு இடத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதையடுத்து சபை கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கோரி போதகர் அருண் அந்தோணி தலைமையில் சபை மக்கள் கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் திருச்சபை கட்ட அனுமதி கிடைக்கவில்லை. இதனால் போதகர் அருண் அந்தோணி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சபை மக்கள் நேற்று முன்தினம் காலை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர். பின்னர் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கக்கோரி ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை ஆகியவற்றை ஒப்படைக்க முயன்றனர். அதிகாரிகள் சமாதானப்படுத்தியும் ஏற்றுக்கொள்ளவில்லை.
2-வது நாளாக போராட்டம்
பின்னர் கலெக்டர் அலுவலகம் முன் வராண்டாவில் அமர்ந்து குடும்பத்துடன் தர்ணாவை தொடங்கினார்கள். இந்த தர்ணா இரவு வரை நீடித்தது. அதிகாரிகள் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. விடிய, விடிய அங்கேயே படுத்திருந்து போராட்டத்தை தொடர்ந்தார்கள். இதன்காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.நேற்று 2-வதுநாளாக தர்ணா போராட்டம் நடைபெற்றது.
பின்னர் திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தலைமையில் கிறிஸ்தவ மக்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. திருச்சபை கட்டுவதற்கு அனுமதி குறித்து இன்னும் ஒரு வாரத்தில் முடிவு செய்து தெரிவிக்கப்படும் என்று சப்-கலெக்டர் கூறியதை தொடர்ந்து தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். மதியம் 4 மணிக்கு பிறகு அனைவரும் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலைந்து சென்றனர். முன்னதாக நேற்று நடைபெற்ற போராட்டத்தில் திருப்பூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ சபை போதகர்கள் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.