சென்னையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு; போக்குவரத்து மாற்றம்

சென்னையில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளதை முன்னிட்டு, 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மேலும் அந்த பகுதிகளில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

Update: 2023-10-07 05:37 GMT

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இந்திய அணி முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சந்திக்கிறது. இதுதவிர சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் 13, 18, 23 மற்றும் 27-ந்தேதிகளிலும் அடுத்தடுத்து போட்டி நடைபெறுகிறது. இதில் வெவ்வேறு அணிகள் மோதுகின்றன.

கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து உள்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 2 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேவைக்கு தகுந்தவாறு போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதுஒருபுறம் இருக்க போட்டி நடைபெறும் நாட்களில் பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரையில் கிரிக்கெட் மைதானத்தை சுற்றி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் (கெனால் ரோடு) இருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

* பெல்ஸ் சாலை தற்காலிக ஒருவழி பாதையாக மாற்றப்பட்டு, பாரதிசாலை-பெல்ஸ்சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை-பெல்ஸ்சாலை சந்திப்பிலிருந்து பெல்ஸ்சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. கண்ணகி சிலையில் இருந்து வரும் அரசு பஸ்கள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை. நேராக ரத்னா கபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

* பாரதி சாலை ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதிசாலை-பெல்ஸ்சாலை சந்திப்பில் திருப்பப்பட்டு பெல்ஸ் சாலை வழியாக வாலாஜாசாலை சென்று தங்கள் இலக்கை சென்றடையலாம். பாரதிசாலை-பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை. இதேபோல் வாலாஜா, காமராஜர் சாலை பகுதியிலும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

* அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள், அண்ணாசாலையில் இருந்து அண்ணாசிலை வழியாக வாலாஜா சாலை வரும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை காமராஜர் சாலை வழியாக பொதுப்பணித்துறை அலுவலகம் (பி.டபிள்யூ.டி) எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம்.

போர் நினைவு சின்னம் வழியாக வரும் வாகனங்கள், காமராஜர் சாலை வழியாக பி.டபிள்யூ.டி எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகன நிறுத்தங்களுக்கு செல்லலாம். காந்தி சிலையில் இருந்து வரும் வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக பி.டபிள்யூ.டி எதிராக உள்ள கடற்கரை உட்புறச்சாலையில் நிறுத்தங்களுக்கு செல்லலாம். அனுமதி உள்ள வாகனங்களுக்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்