விவசாயிகளுக்கான கடன்களை விரைவில் வழங்க வேண்டும்

விவசாயிகளுக்கு பயிர்கடன், கால்நடை பராமரிப்பு கடன் உள்ளிட்ட கடன்களை விரைவில் வழங்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

Update: 2022-07-29 17:08 GMT

விவசாயிகளுக்கு பயிர்கடன், கால்நடை பராமரிப்பு கடன் உள்ளிட்ட கடன்களை விரைவில் வழங்க வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.

கூட்டம்

சிவகங்கை மாவட்ட அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கு உரம் வினியோகம் தொடர்பான ஆய்வு கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- மாவட்டத்திலுள்ள 125 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர்கடன் மற்றும் உரம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பெய்துவரும் மழையை பயன்படுத்தி விவசாயிகள் கோடை உழவு செய்து விவசாய பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளனர்.

கடன்கள்

இந்த பருவத்தில் சாகுபடி செய்திடும் அனைத்து பயிர்களுக்கு தேவைப்படும் யூரியா, டி.ஏ.பி., பொட்டாஸ், காம்பளக்ஸ் உரங்கள் முன் கூட்டியே கணக்கீடு செய்து பெற்று விவசாயிகளுக்கு வினியோகம் செய்திட வேண்டும். தற்போது மாவட்டத்தில் யூரியா 1,462 மெ.டன், டி.ஏ.பி. 353 மெ.டன், பொட்டாஸ் 370 மெ.டன், காம்பளக்ஸ் 1,678 மெ.டன் தனியார் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு உள்ளது.

கரும்பு சாகுபடி செய்திடும் விவசாயிகளுக்கு தேவைப்படும் யூரியா உரத்தினை கிரிப்கோ நிறுவனம் மூலம் பெற்று தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு பயிர்கடன், கால்நடை பராமரிப்பு கடன் உள்ளிட்ட கடன்களை விரைவில் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குனர் தனபாலன், இணை பதிவாளர் கூட்டுறவுத்துறை ஜீனு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன், வேளாண்மை உதவி இயக்குனர் பரமேஸ்வரன், வேளாண்மை அலுவலர் பொன்னுச்சாமி, டான்பெட் மண்டல மேலாளர் பிரசன்னா மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்