குடியிருப்பு பகுதியில் பட்டாசு தயாரிக்கும் நிலை

கடைசி நேர உற்பத்தியில் தீவிரம் காட்டும் சிலர் விதிகளை மீறி குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு தயாரிக்கும் நிலை உள்ளதை அதிகாரிகள் தடுக்க ேவண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Update: 2023-09-29 22:11 GMT

சிவகாசி, 

கடைசி நேர உற்பத்தியில் தீவிரம் காட்டும் சிலர் விதிகளை மீறி குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு தயாரிக்கும் நிலை உள்ளதை அதிகாரிகள் தடுக்க ேவண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 50 நாட்கள் மட்டும் உள்ள நிலையில் சிவகாசியில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. போதிய விலை கிடைக்காமல் பட்டாசு உற்பத்தியாளர்கள் தவித்து வருகிறார்கள். மூலப்பொருட்களின் விலை உயர்வால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 30 சதவீதம் விலை உயர்வு இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் வட மாநில மொத்த வியாபாரிகள் வழக்கமான கொள்முதலில் தற்போது 50 சதவீதம் கூட சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் வாங்க வில்லை என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மேலும் அதிக செலவு செய்து உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் வெளி மாநிலங்களுக்கு செல்லாமல் இருப்பதால் இங்குள்ள உற்பத்தியாளர்களும், மொத்த விற்பனையாளர்களும் பெரும் நெருக்கடியில் உள்ளனர்.

சட்டவிரோதம்

இந்தநிலையில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் பட்டாசுகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதற்கு காரணம் பிரபல நிறுவனங்களின் தயாரிப்பை விட சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் பட்டாசுகளின் விலை சுமார் 40 சதவீதம் குறைத்து விற்பனை செய்யப்படுவது தான். வழக்கமாக வடமாநில மொத்த வியாபாரிகள் சிவகாசிக்கு வந்து இங்குள்ள பட்டாசு ஆலைகளுக்கு நேரடியாக சென்று தங்களுக்கு தேவையான பட்டாசுகளை வாங்கி சென்றனர்.

ஆனால் தற்போது இங்குள்ள சில புரோக்கர்கள் வடமாநில வியாபாரிகளுக்கு தேவையான பட்டாசுகளை மொத்தமாக வாங்கி லாரிகள் மூலம் அனுப்பி வைக்கிறார்கள். இதனால் மொத்த வியாபாரிகளுக்கு பல்வேறு வகையில் லாபம் இருக்கிறது. இதனை 80 சதவீத வியாபாரிகள் பின்பற்ற தொடங்கி விட்டனர்.

அதிகாரிகள் நடவடிக்கை

இந்தநிலையில் சிவகாசிக்கு உட்பட்ட பல இடங்களில் குடியிருப்பு மற்றும் வன பகுதி, கடைகளின் அருகில் பாட்டாசுகள் தயாரிக்கப்படும் நிலை தொடர்கிறது. இதுகுறித்து அவ்வபோது புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன் இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்தும் அது உரிய பலனை தரவில்லை என கூறப்படுகிறது. இதுபோன்ற சட்ட விரோத தயாரிப்புகளால் விபத்து ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. எனவே குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு தயாரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்