சாலையில் சுற்றி திரியும் மாடுகள்
வந்தவாசியில் சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.
வந்தவாசி
வந்தவாசி நகரின் பல்வேறு சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதாகவும், மாடுகள் முட்டி பொதுமக்களுக்கு காயம் ஏற்படுவதாகவும் வந்தவாசி நகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து நகரமன்ற தலைவர் எச்.ஜலால், பொறியாளர் சரவணன் ஆகியோரின் உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள் இன்று சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் பஜார் வீதி, கோட்டை மூலை, தேரடி, அச்சரப்பாக்கம் சாலை, குளத்துமேடு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த 27 மாடுகளை பிடித்து நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
இதையடுத்து நகராட்சி அலுவலகத்துக்கு வந்த மாட்டின் உரிமையாளர்கள் உரிய அபராதம் செலுத்திவிட்டு மாடுகளை பெற்றுச் சென்றனர்.