காட்டெருமை தாக்கி பசு படுகாயம்

ஆயக்குடி அருகே காட்டெருமை தாக்கியதில் பசுமாடு படுகாயம் அடைந்தது.

Update: 2023-08-10 20:15 GMT

பழனியை அடுத்த ஆயக்குடி மலையடிவாரத்தில் உள்ள சட்டப்பாறை பகுதி தோட்டங்களில், கடந்த சில தினங்களாக காட்டெருமை ஒன்று சுற்றி திரிகிறது. இந்த காட்டெருமை தோட்டத்தில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்துவதோடு விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது. அதன்படி சில நாட்களுக்கு முன்பு ஆயக்குடியை சேர்ந்த கனகராஜ் என்ற விவசாயியை முட்டி தள்ளியது. அதன்பிறகு விவசாயிகள் தோட்ட பகுதிக்கு செல்லவே அச்சம் அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று சட்டப்பாறையில் உள்ள பழனிசாமி (வயது 50) என்பவரின் தோட்டத்தில் புகுந்த காட்டெருமை, அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுமாட்டை முட்டி தள்ளியது. இதில் பசு படுகாயம் அடைந்தது. சத்தம் கேட்டு பழனிசாமி வந்து பார்த்தபோது, பசுமாடு படுகாயத்துடன் உயிருக்கு பேராடி கொண்டிருந்தது. பின்னர் உடனடியாக கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு, பசுமாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் படுகாயம் அடைந்த பசுமாட்டை பார்வையிட்டனர். இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, ஆயக்குடி சட்டப்பாறை பகுதியில் தொடர் அட்டகாசம் செய்யும் காட்டெருமையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்