தம்பதியை தாக்கி ரூ.6 லட்சம் நகை-பணம் கொள்ளை

கீழ்பென்னாத்தூரில் வீடு புகுந்து தம்பதியை தாக்கி ரூ.6 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-03-29 16:43 GMT



கீழ்பென்னாத்தூரில் வீடு புகுந்து தம்பதியை தாக்கி ரூ.6 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பூட்டு உடைக்கும் சத்தம்

திருவண்ணாமலை-சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கீழ்பென்னாத்தூர்-எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் பைபாஸ் சாலை சந்திக்கும் இடத்தின் அருகில் வசித்து வருபவர் பாஸ் என்கிற வெங்கடாஜலபதி (வயது 67). இவரது மனைவி பிருந்தா (55). இவர்களுடைய மகள் சூர்யாவுக்கு திருமணமாகி சென்னையில் வசித்து வருகிறார்.

பைபாஸ் சாலை சந்திக்கும் இடத்தின் அருகில் தனியாக கட்டப்பட்டுள்ள மாவுமில், பெட்டிக்கடை ஆகியவற்றின் உள்புறம் உள்ள வீட்டில் கணவன்-மணைவி இருவர் மட்டுமே வசித்து வருகின்றனர்.

தினமும் இரவு நேரத்தில் கடைகளின் முன்பக்கம் உள்ள ஷட்டர்களை பூட்டிக்கொண்டு வீட்டின் உள்ளே சென்று தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் வீட்டின் உள்ளே கணவன்-மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் கடையின் ஷட்டரில் பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு பிருந்தா எழுந்து வந்து யார்? என கேட்டுள்ளார். பின்னர் கணவரையும் எழுப்பி உள்ளார்.

இதனையடுத்து கணவன்-மனைவி இருவரும் வீட்டை திறந்து கொண்டு வந்த போது கட்டிடத்தின் காம்பவுண்டு சுவரின் உட்புறம் பதுங்கி இருந்த முகமூடி அணிந்த மர்ம நபர்கள் திடீரென ஓடிவந்து இரண்டு பேரையும் மிரட்டி வீட்டின் உள்ளே பீரோ வைத்திருந்த அறைக்குள் அழைத்துச் சென்று உட்கார வைத்தனர்.

நகை-பணம் கொள்ளை

பின்னர் இரும்பு ராடு, கடப்பாரை, ஸ்குரூ டிரைவர் போன்றவற்றால் கணவன்-மனைவியை மிரட்டியும், பிருந்தா அணிந்திருந்த நகை மற்றும் பீரோவில் இருந்த தங்க டாலருடன் கூடிய சங்கிலி, 2 கிலோ அளவு எடையுள்ள வெள்ளி பொருட்கள், ரூ.70 ஆயிரம் ரொக்கம், கணவன்-மனைவி பயன்படுத்தி வந்த 2 செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு, கணவன்-மனைவியை வீட்டின் உள்ளே வைத்து வெளிப்புறம் தாழ்ப்பாள் போட்டு விட்டு அங்கிருந்து முகமூடி கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

அதிகாலை 3 மணி அளவில் அந்த வழியாக சென்றவர்கள் வீட்டில் இருந்து சத்தம் வருவதை கேட்டு, அங்கு சென்று பார்த்தனர். அப்போது கணவன்-மனைவி இருவரும் நடந்ததை அவர்களிடம் கூறினர். இதனையடுத்து அவர்கள் வெளிப்புறமாக போடப்பட்டு இருந்த தாழ்ப்பாளை திறந்துவிட்டனர். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருவண்ணாமலை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், கீழ்பென்னாத்தூர் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், ஏழுமலை, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கோடீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் விரல் ரேகை பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரராஜன் தலைமையிலான கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர்.

கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

முன்னதாக கொள்ளையர்கள் தாக்கியதில் கணவன்-மனைவிக்கு லேசான காயம் ஏற்பட்டது. 10 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் ரொக்கம், 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதாக கணவன்-மனைவி தெரிவித்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சத்துக்கும் மேல் இருக்கும்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்