பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றிய கவுன்சிலர்கள்

வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் பல்வேறு கோரிக்கைகளை கவுன்சிலர்கள் தீர்மானமாக நிறைவேற்றியதற்கு ஒத்துழைக்க மறுத்த செயல் அலுவலரால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-17 18:28 GMT

சாதாரணக்குழு கூட்டம்

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் சாதாரணக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் மார்கிரேட் அல்போன்ஸ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் எட்வின் ஆர்தர், பேரூராட்சி செயல் அலுவலர் மருதுபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஒப்பந்ததாரரும், பம்ப் ஆபரேட்டருமான ஸ்ரீதருக்கு ஒப்பந்த வேலை செய்த வகையில் தரவேண்டிய பழைய பாக்கித்தொகையையும், ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பணத்தையும் கொடுக்க வேண்டும் என்று பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட 15 கவுன்சிலர்களும் சேர்ந்து விவாதம் செய்தனர். இதற்கு செயல் அலுவலர் பழைய ரசீது தொகையை தர இயலாது என மறுத்துள்ளார்.

பணியிட மாற்றம் செய்ய வேண்டும்

செயல் அலுவலர் பேரூராட்சி வேலை திட்டங்கள் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு தராமலும், பேரூராட்சிக்கு சொந்தமான முந்திரிக்காடு ஏலத்தொகை சென்ற ஆண்டு ரூ.38 ஆயிரத்துக்கு ஏலம் போனது. ஆனால் இந்த ஆண்டு ரூ.55 ஆயிரம் கட்டினால் தான் ஏலம் விட முடியும் என்று கூறியதால், ஏலம் எடுக்கும் காலம் நவம்பர் மாதத்தில் நடைபெறாமல் தாமதம் ஆனது. இந்த தாமதத்தை காரணம் காட்டி ஏலத்தை புறக்கணித்து ரத்து செய்து தாமாகவே தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.

மேலும் பொது நிதியை செயல் அலுவலர் கையாடல் செய்வதாகவும், பேரூராட்சிக்கு செய்யப்பட வேண்டிய அடிப்படை தேவை மற்றும் வேலைகளை செய்வதற்கு தடையாக உள்ளதாகவும் கூறி பேரூராட்சி செயல் அலுவலரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனவும், இல்லையேல் மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை திட்டங்களை நிறைவேற்ற இயலாது எனவும் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் உள்பட 15 வார்டு கவுன்சிலர்களும் ஒன்று சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றினர்.

பெரும் பரபரப்பு

மேலும் பழைய ரசீது பணத்தை தராமல் தாமதப்படுத்தியதாகவும், இதுகுறித்து திருச்சி கோட்ட ஏ.டி. பஞ்சாயத்து அலுவலரிடம் மனு கொடுத்துள்ளதாகவும், அதற்கு ஏ.டி. பஞ்சாயத்து அலுவலர் ரசீது தொகையை தர செயல் அலுவலருக்கு அறிவுறுத்தியும், செயல் அலுவலர் பணத்தை தர தொடர்ந்து மறுப்பதாகவும் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் உள்பட 15 கவுன்சிலர்களும் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் கேட்டபோது, முன்பு இருந்த செயல் அலுவலர் செய்த வேலைகளுக்கு நான் எப்படி ரசீது தொகை தர முடியும். நான் வேலைக்கு வந்ததிலிருந்து செய்த வேலைகளுக்கு மட்டுமே என்னால் பணம் தர முடியும். கவுன்சிலர்கள் தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டதால் அப்பகுதியில் உள்ள 3 மின் மோட்டார்கள் பழுதடைந்து விட்டதாகவும், குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுவதாகவும் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து செயல் அலுவலரிடம் கேட்டபோது, மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தால் தான் வேலை செய்ய முடியும் என அவர் தெரிவித்தார். கவுன்சிலர்களின் மேற்கண்ட தீர்மானங்களுக்கு செயல் அலுவலர் ஒத்துழைப்பு தராமலும், ஒப்புதல் வழங்காததாலும், பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் உள்பட 15 வார்டு கவுன்சிலர்களும் வேதனை தெரிவித்தனர். இதனால் வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்