கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சமாக உயர்வு - சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
பள்ளிகளில் மாதிரி ஐ.நா.குழு அமைக்கப்படும் என்றும், கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.40 லட்சமாக உயர்த்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம், ரிப்பன் மாளிகை கட்டிடத்தின் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. பின்னர் மேயர் பிரியா, 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார்.
பட்ஜெட்டில் கூறப்பட்ட முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-
* சென்னையில் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் செய்முறை வகுப்புகளை சிறப்பான முறையில் நடத்திட ஆய்வகங்களின் உட்கட்டமைப்பு படிப்படியாக மேம்படுத்தப்படும். முதல்கட்டமாக ரூ.2 கோடியில் 10 மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும்.
* சென்னை மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளிலும் ஒவ்வொரு தளத்திலும் 'பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம'் அமைத்து தரப்படும். முதற்கட்டமாக உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.35 லட்சத்தில் 70 'பப்ளிக் அட்ரஸ் சிஸ்டம்' அமைத்து தரப்படும்.
*சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ள 139 பள்ளிகளுக்கு ரூ.15 கோடியில் அனைத்து விதமான பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படும். இந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* மாணவர்கள் கற்றல், கற்பித்தல் மட்டுமின்றி நமது நாட்டின் நாடாளுமன்ற நடைமுறைகளை அறிவதோடு, பிறநாடுகளின் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் சவால்கள், பன்னாட்டு கலாசாரங்கள், கல்விமுறை, சுற்றுச்சூழல் ஆகியவற்றை கற்பிப்பதற்கு பள்ளிகளில் மாதிரி ஐக்கிய நாடு குழு அமைக்கப்படும்.
* 10, 12-ம் வகுப்புகளில் 100 சதவிகிதம் தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.1,500-ல் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
* 10,12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி ஏற்படுத்திய ஆசிரியர்கள் விடுமுறை நாட்களில் கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள்.
* 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 சதவிகிதம் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
* சென்னை பள்ளிகளில் பயின்று மேல்நிலை கல்வியில் தேர்ச்சி பெற்று ஜெ.இ.இ, கிளாட் மற்றும் நீட் போன்ற தேர்வுகளில் வெற்றிபெற்று அதன்மூலம் தேசிய முக்கியத்தும் வாய்ந்த அரசு கல்வி நிறுவனங்களில் மட்டும் சேரும் மாணவர்களின் முதலாம் ஆண்டு கல்விக்கட்டணம் மட்டும் சென்னை மாநகராட்சியால் வழங்கப்படும்.
* 9,10,11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களை 4 குழுக்களாக பிரித்து அரக்கு, பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய 4 வண்ணங்களில் 28 ஆயிரத்து 200 மாணவர்களுக்கு ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் டீ-சர்ட் வழங்கப்படும்.
* சுகாதாரத்துறையின் கீழ் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.18 லட்சத்து 75 ஆயிரம் ஒதுக்கீட்டில் மழைக்கவச உடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும்.
* செனாய் நகர், ஆலந்தூர் மண்டலங்களில் தலா ரூ.1 கோடி மதிப்பீட்டில் 2 டயாலிசிஸ் மையங்கள் அமைக்கப்படும்.
* குப்பையில்லா தூய்மையான வார்டுகளை உருவாக்கி சிறந்த வார்டுகளுக்கு வெகுமதி வழங்கும் நடைமுறை ஏற்படுத்தப்படும்.
* மழைநீர் வடிகால் அமைக்கப்பட்ட இடங்களை தவிர்த்து மற்ற இடங்களில் ரூ.232 கோடியில் புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
* அனைத்து மழைநீர் வடிகால்களிலும் தூர்வாரும் பணி ரூ.55 கோடியில் மேற்கொள்ளப்படும்.
* மெரினா கடற்கரை, அண்ணாநகர் டவர் பூங்கா, கூவம், அடையாறு ஆறு, பி.ஓ.வி.நிலையங்கள், லாரி நிலையங்களில் 105 கண்காணிப்பு கேமராக்கள் ரூ.2 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
* பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து குறைகள் களையும் பொருட்டு மாதத்துக்கு ஒருமுறை, ஏதேனும் ஒரு வட்டார அலுவலகத்தில் மேயர் நேரடியாக மனுக்களை பெறும் வகையில் 'மக்களை தேடி மேயர்' திட்டம் செயல்படுத்தப்படும்.
* கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி 2022-23-ம் நிதியாண்டில் ரூ.35 லட்சமாக உயர்த்தப்பட்டது. 2023-24-ம் நிதியாண்டு முதல் கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்படும்.
இவ்வாறு 83 தலைப்புகளில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு மேயர் பிரியா பேசினார்.
மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கவுன்சிலர்கள், நாடாளுமன்றத்தில் இருந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து கருப்பு உடை அணிந்து கலந்து கொண்டனர்.