கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கீழ்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2023-09-19 18:45 GMT

கருங்கல்:

கீழ்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கீழ்குளம் பேரூராட்சி

கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளான கீழ்குளம், தண்டுமணி, பாம்பழம், புல்லுவிளை, பொத்தியான்விளை, தெங்குவிளை, உடவிளை, இனயம் பண்டகசாலைபுரம், தேரிவிளை, இனையம் தோப்பு, ஹெலன் நகர் உள்ளிட்ட பகுதிகளை இனயம் புத்தன்துறை ஊராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு செய்து, வீட்டு வரி விதித்து வீடு கட்ட அனுமதி வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இதனால் கீழ்குளம் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை மற்றும் வடிகால் போன்ற பணிகள் செய்ய விடாமல் தடுத்தும் வருவதாகவும் புகார் கூறுகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சார்பில் மனுக்கள் அளித்தும் எந்த பயனும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

உள்ளிருப்பு போராட்டம்

இந்தநிலையில் இனயம் புத்தன்துறை ஊராட்சி நிர்வாகத்தின் மீதும், அதற்கு துணை போகும் கிள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க கேட்டு கீழ்குளம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் சரளா கோபால் தலைமையில் துணைத் தலைவர் விஜயகுமார் உட்பட 12 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக அப்பகுதியில் பொதுமக்களும் திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. அதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து கவுன்சிலா்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் இரவு வெகுநேரமாகியும் போராட்டம் நீடித்தது. 

Tags:    

மேலும் செய்திகள்