தஞ்சை மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

தூய்மை பணியாளர்கள் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக கூறி அ.தி.மு.க.- பா.ஜ.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று மேயர் சண்.ராமநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2023-06-28 20:40 GMT

தூய்மை பணியாளர்கள் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக கூறி அ.தி.மு.க.- பா.ஜ.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று மேயர் சண்.ராமநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

மாநகராட்சி கூட்டம்

தஞ்சை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் கூட்ட அறையில் நேற்று நடைபெற்றது. துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

மேயர் சண்.ராமநாதன்:- தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள ஆம்னி பஸ் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயர் சூட்டப்படும்.

மண்டலக்குழு தலைவர் மேத்தா (தி.மு.க.):- ஆற்றில் தண்ணீர் வந்துள்ளதால் அய்யங்குளம், சமந்தான்குளம், அகழி ஆகியவற்றில் தண்ணீர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீன்மார்க்கெட் இடமாற்றம்

காந்திமதி (அ.தி.மு.க.) :- தஞ்சை கீழவாசல் வெள்ளப்பிள்ளையார் கோவில் அருகே செயல்பட்டு வரும் தற்காலிக மீன் மார்க்கெட்டை மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக இடமாற்றம் செய்ய வேண்டும்.

ஆனந்த் (தி.மு.க.):- பாலோபநந்தவனம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாய் தரமாக அமைக்காததால், பொருத்திய நாளிலிருந்து பிரதான குழாயிலிருந்து குடிநீர் வெளியேறுகிறது.

மேயர் சண்.ராமநாதன்:- குடிநீர் குழாய் உடனே சீரமைக்கப்படும்.

தூய்மை பணி

கோபால் (அ.தி.மு.க.):- எனது வார்டில் 90 சந்துகள் உள்ளன. இங்கு ஆனால் தூய்மை பணி முழுமையாக நடைபெறவில்லை.

மணிகண்டன் (அ.தி.மு.க.):- தஞ்சை மாநகராட்சியில் தூய்மைப்பணி ஒப்பந்தக்காரரிடம் விடப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு பி.எப்., இ.எஸ்.ஐ. ஆகியவை ஒப்பந்தக்காரர்கள் செலுத்த வேண்டும். ஆனால் விதிமுறையை மீறி தூய்மை பணியாளர்களிடம் 30 சதவீதம் பிடித்தம் செய்துதான் ஊதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஒப்பந்தக்காரருக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஆணையர் சரவணகுமார்:- இந்த திட்டத்தில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை. இது தொடர்பாக வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் தாங்களும் கலந்து கொள்ளலாம்.

அ.தி.மு.க.- பா.ஜ.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

அப்போது, ஒப்பந்த பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்துள்ளதால், நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் எனக்கூறி மணிகண்டன் தலைமையில் அ.தி.மு.க., பா.ஜ.க. கவுன்சிலர்கள் தூய்மை பணியாளர்களை வஞ்சிக்காதே என கோஷம் எழுப்பியபடி வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் மணிகண்டன் (அ.தி.மு.க.) நிருபர்களிடம் கூறுகையில், தூய்மை பணியாளர்கள் 250 பேருக்கு ஒப்பந்த அடிப்படையில் கடந்த மாதம் பணிகள் வழங்கப்பட்டது. இவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் ஈ.எஸ்.ஐ., பி.எப். என சுமார் ரூ.5 ஆயிரம் பிடித்தம் செய்து கொண்டு ரூ.10 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்குகிறார்கள். ஒப்பந்தக்காரரிடம் கடந்த மாதம் பணிகள் வழங்கியும் இதுவரை எந்தப்பணியும் செய்ய வில்லை. ஆனால் ரூ.1 கோடிக்கான ரசீதை வழங்கியுள்ளார்கள். இதில் அவர்கள் ரூ.50 லட்சத்தை மட்டுமே ஊதியமாக வழங்கி விட்டு, மீதமுள்ள ரூ.50 லட்சத்தில் முறைகேடு செய்துள்ளார்கள். இது தொடர்பாக கேள்வி கேட்டதால், கூட்டத்தை முடித்துக்கொள்கின்றோம் என மேயர் கூறியதால், இதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றார்,

முறைகேடு நடைபெறவில்லை

பின்னர் மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறுகையில், தூய்மை பணியை ஒப்பந்த அடிப்படையில் விடுவது தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விடப்பட்டுள்ளது. இப்பணி ஒரு மாதம் நிறைவடைந்து, 2-வது மாதம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, வேலையே தொடங்கவில்லை எனக் கூறுவது தவறு. இதில் எந்தவித முறைகேடு நடைபெறவில்லை. என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்