ரூ.3 கோடிக்கு பருத்தி ஏலம்

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.3 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

Update: 2022-08-17 18:36 GMT
திருவாரூர் மாவட்டத்தில் 16 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது பருத்தி பஞ்சுகள் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த பருத்தி பஞ்சுகளை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.

அதன்படி திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் பருத்தி பஞ்சுகளை விவசாயிகள் வைத்திருந்தனர். இந்த ஏலத்தில் கும்பகோணம், பண்ருட்டி, செம்பனார்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

ரூ.3 கோடிக்கு ஏலம்

விவசாயிகள் கொண்டு வந்த பருத்தியை வியாபாரிகள் பார்வையிட்டு, தாங்கள் கேட்கும் தொகையை ஏலச் சீட்டில் எழுதி பெட்டியில் போட்டனர். இதனைத்தொடர்ந்து திருவாரூர் விற்பனைக்குழு செயலாளர் சரசு தலைமையில் கண்காணிப்பாளர் செந்தில்முருகன் மற்றும் மேற்பார்வையாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில் ஏலப்பெட்டியை திறந்து வியாபாரிகள் கேட்ட விலையை படித்தனர்.

இதில், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் பருத்திக்கு ரூ.12,345-ம், குறைந்த பட்சமாக ரூ.10,289-ம் ஏலம் கேட்கப்பட்டிருந்தது. சராசரியாக பருத்தி குவிண்டால் ரூ.11,625-க்கு விற்பனையானது. இதில், மொத்தம் ரூ.3 கோடியே 19 லட்சத்து 27 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் போனது.




Tags:    

மேலும் செய்திகள்