ரூ.3½ கோடிக்கு பருத்தி கொள்முதல்

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.3½ கோடிக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-07-17 15:54 GMT

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.3½ கோடிக்கு பருத்தி கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

பருத்தி சாகுபடி

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி அதிக அளவு நடைபெற்று வருகிறது. அதேபோல கரும்பு, வாழை, தென்னை போன்ற பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.

தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் நெல் சாகுபடி பெருமளவு பாதிக்கப்படுகிறது. சமீப காலமாக டெல்டா விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

மறைமுக ஏலம்

டெல்டா மாவட்டங்களில் அறுவடையாகும் பருத்தி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்பட்டு, வியாபாரிகளிடம் ஏல முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடை செய்த பருத்தி ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து மறைமுக ஏல முறையில் வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர். செம்பனார்கோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைகூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது.

ரூ.3½ கோடிக்கு கொள்முதல்

இதில் 1,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3,250 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். தேசிய வேளாண் மின்னணு திட்டத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ஆந்திரா மாநிலம், தஞ்சை, நாகை, தேனி, சேலம், விழுப்புரம், திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மில் அதிபர்களும், வியாபாரிகளும் கலந்து கொண்டனர். அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 719, குறைந்தபட்சமாக ரூ.7 ஆயிரத்து 265 என பருத்தி விலை நிர்ணயம் செய்யப்பட்டது. சராசரியாக ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 590-க்கு விலை போனது. இதில் மொத்தம் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பிலான பருத்தி கொள்முதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்