நாமக்கல் என்கவுன்டர்; பிடிபட்ட கொள்ளையர்கள் பரபரப்பு வாக்குமூலம்
நாமக்கல் மாவட்டத்தில் பிடிட்ட வடமாநில கொள்ளையர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வடமாநில கொள்ளைகும்பல் நேற்று பிடிபட்டது. கேரள மாநிலம் திருச்சூரில் நேற்று அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.களில் வடமாநிலத்தை சேர்ந்த கொள்ளை கும்பல் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது. இதில் சுமார் 67 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
ஏ.டி.எம்.களில் கொள்ளையடித்துவிட்டு கொள்ளை கும்பல் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் தப்பிச்செல்வதாக நாமக்கல் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, கேரளாவில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி போலீசார் நிறுத்தியும் நிற்காமல் சென்றது. இதையடுத்து விரட்டி சென்ற போலீசார் கண்டெய்னர் லாரியை மடக்கி பிடித்தனர். லாரியில் இருந்த 5 கொள்ளையர்களையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர், லாரி கண்டெய்னரை திறக்க முற்பட்டபோது போலீசாரை தாக்கிவிட்டு லாரி டிரைவர் மற்றும் கண்டெய்னரில் இருந்த மற்றொரு கொள்ளையர் தப்பியோடினார். அப்போது போலீசார் நடத்திய என்கவுன்டரில் கொள்ளையர்களில் ஒருவர் உயிரிழந்தார். தப்பியோடிய கொள்ளையரை போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த கொள்ளையன் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். எஞ்சிய 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளையர்களை பிடிக்க முற்பட்டபோது காயமடைந்த 2 போலீசார் தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும், அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், பிடிபட்ட கொள்ளையர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, கைது செய்யப்பட்டவர்கள் அரியானா மாநிலம் மேவத் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் ஏ.டி.எம். இயந்திரங்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது.
கொள்ளையர்களில் 2 நபர்களில் கண்டெய்னர் லாரியில் சரக்குகளை ஏற்றி வருவதைப் போல் சென்னை மீனம்பாக்கம் பகுதிக்கு வந்துள்ளனர். மேலும் 3 பேர் காரில் சென்னைக்கு வந்துள்ளனர். சென்னையில் இருந்துதான் இவர்கள் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றுவது எப்படி என்பது குறித்து திட்டமிட்டுள்ளனர்.
பின்னர் கண்டெய்னர் லாரியில் காரை ஏற்றிக்கொண்டு தமிழக எல்லையை தாண்டி கேரளாவுக்கு சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து கூகுள் மேப் மூலம் ஏ.டி.எம். இயந்திரங்கள் இருக்கும் இடத்தை நோட்டமிட்டு பின்னர் தக்க சமயம் பார்த்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். அவ்வாறு கொள்ளையடித்துவிட்டு தமிழகம் வழியே தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பும்போதுதான் தமிழக போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளனர்.
இதே கும்பல்தான் கடந்த வாரம் அந்திர மாநிலம் கடப்பாவிலும் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இவர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தில் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இவர்கள் குழுவாக செயல்பட்டு கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வந்ததுள்ளனர். ஏ.டி.எம். கொள்ளையர்கள் 60 முதல் 70 பேர் கொண்ட கும்பலாக உள்ளனர். திருடுவதில் தேர்ந்த 6 பேரை தேர்வு செய்து வெல்டிங் செய்ய ஒருவர், வாகனம் ஓட்ட ஒருவர் என குழுவாக செயலட்டுள்ளனர்.
கொள்ளையர்களின் இருப்பிடம், வங்கி இருப்பு, வாங்கி சொத்துகள் ஆகியவை தொடர்பாகவும், இவர்களுக்கு மூளையாக செயல்பட்டது யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக நாமக்கல் எஸ்.பி.ராஜேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.
பிடிபட்ட கொள்ளையர்கள் மீது விபத்தை ஏற்படுத்துதல், காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல், கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக கேரளாவில் 3 காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பிடிபட்ட கொள்ளையர்களை 2 வாரம் கழித்து விசாரணைக்கு அழைத்துச் செல்ல கேரள போலீசார் அனுமதி கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.